பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



74 நல்வழிச் சிறுகதைகள்

படித்தான். பத்தாண்டுகளாக அவன் வெளியூரிலேயே தங்கியிருந்தான். இடையிடையே விடுமுறைக்கு வருவான். வீட்டில் ஒரிரு நாட்கள் தங்கிச் சென்று விடுவான். பெரிய விடுமுறைகளில் அவன் வீட்டில் பத்து இருபது நாட்கள் தங்கினாலும், நாள்தோறும் கிணற்றடியிலேயே குளித்தாலும், தென்னங் கன்றின் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, ஊருக்குத் திரும்பி வந்தான்.

கோடை காலம். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எங்கும் ஒரே வறட்சி. ஒரு நாள் பக்கத்து ஊரைச் சேர்ந்த அவனுடைய பள்ளித் தோழன் ஒருவன் அவனைப் பார்க்க வந்திருந்தான். அவன் ஏதோ ஓர் உதவி கேட்பதற்காக வந்திருந்தான். வந்தவன், வெயிலில் வந்த களைப்பால் நா வறண்டு போயிருந்ததால், தண்ணீர் கேட்டான்.

இளைஞன், தண்ணீர் மொண்டு வர அடுக்களைக்குச் சென்றான்.

“வந்த விருந்தாளிக்கு வெறுந் தண்ணீரையா கொடுப்பது? அதோ கொல்லைப் புறத்தில் இருக்கும் தென்னை மரத்தில் இரண்டு இளநீர் பறித்துக் கொண்டு வா. நண்பனுக்குக் கொடுத்து நீயும் சாப்பிடு !" என்றாள் தாய்.

இளைஞன் அவ்வாறே மரத்தில் ஏறி இரண்டு இளநீர் பறித்துக்கொண்டு இறங்கினான். அவற்றைச்