பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 நன்னெறி மணி

என் தந்தை இரப்பவர்க்கீந்து வறுமையடைந்தான் எனக்கூறி அவன் பிள்ளைகள் ஈகைக் குணத்தைக் கைவிடுவதில்லை. செழித்து வளர்ந்து நின்ற வாழை மரமானது காயும், கனியும் ஈந்ததினாலேயே அழிந்துபோயிற்று என்பதை அறிந்தும், அதனடியில் தோன்றிய கன்றும் அவ்வாறு காயும், கனியும் கொடுக்க மறுப்பதுமில்லை; மறப்பதுமில்லை. (81)

இனிய சொற்களால்தான் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்; கடுஞ் சொற்களைக் கேட்டு எவரும் மகிழ்ச்சியடைவதில்லை. அனல் கக்கும் சூரியனுடைய ஒளியைக் கண்டு கடல் பொங்கி எழுவதில்லை; குளிர்ச்சியுள்ள சந்திரனுடைய ஒளியைக் கண்டுதான் கடல் பொங்கி எழுகிறது. (82)

நல்லொழுக்கமுள்ள அறிஞர்களின் வரவைக்கண்டு நன்மக்கள் மனமகிழ்ச்சியை அடைகின்றனர். தீயவர்களின் வரவைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இனிய கனிகளைக் கொடுக்கின்ற மாமரமானது, தென்றல் காற்றின் வருகையைக் கண்டு இளந்தளிர்களை விட்டுச் செழித்து நிற்கிறது. ஆனால், அதே மரம் ஆடிக்காற்றின் வருகையால் ஆடி அசைந்து, இலைகளை உதிரித்து வாடி, வதங்கி நிற்கிறது. (83)

சிறந்த மக்கள் பிறருக்கு வந்த துன்பங்களைத் தமக்கு வந்ததாகவே கருதி, மனமிளகி உருகி வருந்தும் சிறந்த உறுப்புக்களான கண்கள் தமக்கு ஒரு துன்பமும் நேராத போதும், பிற உறுப்புக்கள் துன்பமடைவதைக் கண்டு வருந்திக் கலங்கி அழுவதைக் காண்கிறோம். (84)

பிறப்பைக் கொண்டு உயர்வு தாழ்வு கற்பிப்பது பெருந் தவறு. குணத்தைக் கொண்டு கூறுவதே சிறப்புடையதாக விருக்கும். மணியைப் பாம்பினிடத்துத் தோன்றியது என்பதற்காக வெறுப்பவரும், நஞ்சு பாற்கடலில் தோன்றியது என்பதற்காகக் குடிப்பவரும் இங்கில்லை. (85)