பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

நவகாளி யாத்திரை


முஸ்லிம் குடியானவன்தான் என்றும், அரிவாளுடன் வயலுக்குப் போகும் வழியில் என்னைச் சந்தித்த இடத்தில் எதேச்சையாக அவன்பாட்டுக்கு "ஹிந்துவா, முஸ்லிமா?" என்று கேள்வி போட்டிருக்கிறான் என்றும், வீணான பீதி காரணமாக நானே அவனைக் கண்டு மிரண்டு போயிருக்கிறேன் என்றும் அப்புறம்தான் ஊகித்துத் தெரிந்துகொண்டேன்.

கண்டேன் காந்தியை!

அப்புறம் எப்படியோ தட்டுத் தடுமாறி ஸ்ரீநகர் கிராமத்தை அடைவதற்குள் மணி மூன்றாகிவிட்டது. காந்திஜியின் ஆசிரமம் ஒரு தென்னந் தோப்புக்குள் இருந்தது. குளுமையான அந்தத் தோப்புக்குள் பிரவேசித்தபோது என் பசி தாகமெல்லாம் பறந்து போய்விட்டன. என்னை அறியாமல் என்னிடம் ஒரு வித பக்தி உணர்ச்சி தோன்றியது. ஏதோ தெய்வீக சக்தி வாய்ந்த ஆலயம் ஒன்றின் கர்ப்பக் கிருகத்துக்குள் பிரவேசிப்பதைப் போன்ற புனித உணர்ச்சி உண்டாயிற்று. அங்கே காணப்பட்ட ஒரு சிறு செங்கல் வீட்டுக்குள்தான் மகாத்மா இருக்கிறார் என்று