பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

நவகாளி யாத்திரை


அந்த மண்டை ஓடுகளின் மேல் ஊன்றி நிறுத்தினார். நீண்ட பெருமூச்சுடனே ஆகாயத்தை நோக்கிப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அகால மரணமடைந்த அந்த மண்டையோட்டுக்கு உடையவர்களின் ஆத்ம சாந்திக்காகவே காந்திஜி பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். இந்த மெய்சிலிர்க்கும் தெய்வ வடிவக் காட்சியைக் கண்டபோது எங்களுக்கெல்லாம் விவரிக்க இயலாத ஓர் உணர்ச்சி உண்டாயிற்று.

காந்தி மகான் தம்முடைய அஹிம்சா யாத்திரையில் இதுவரை சுமார் நாற்பத்தேழு கிராமங்களுக்கு விஜயம் செய்து, அங்குள்ள ஹிந்து முஸ்லிம்களின் சமரசத்துக்காக மகத்தான பல முயற்சிகளில் ஈடுபட்டு ஒரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்.

"காந்தி மகான் நவகாளியில் என்னத்தைச் சாதித்து விட்டார்?" என்று சில அதிசயப் பிரகிருதிகள் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்கிறார்கள்.

உயர்ந்த லட்சியத்தை உள்ளத்திலே கொண்டு காந்தி மகான் உலகம் உய்ய உழைத்து வருகிறார். அவருடைய உன்னதத் தொண்டு காரணமாக துவேஷமும், பீதியும் சூழ்ந்திருந்த இருண்ட வனாந்தரப் பிரதேசமான நவகாளி ஜில்லாவில் சாந்தமும், சமரஸமும் ஏற்பட்டு வருகின்றன.

நவகாளியில் அகதிகளுக்கு இழந்த வீடுகளைக் கட்டிக் கொடுப்பதிலும், பாழடைந்த வீடுகளைப் புதுப்பித்துக் கொடுப்பதிலும் மகாத்மா தம்முடைய கவனத்தைச் செலுத்தவில்லை. மகாத்மா அங்கே கட்டுவது வெறும் மண் வீடல்ல; அன்பின் ஆலயத்தையே