பக்கம்:நாடகத் தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பூர்வ காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கிய நாடகங்கள் இப்பொழுது இல்லாமைக்கு மற்றொரு காரணம், தமிழ் நாட்டில் பூர்வ காலத்தில் சில பாகம் கடல் கொள்ளை கொண்டது, எனச் சிலர் கூறுகின்றனர். சாதாரணமாகப் பெரிய ராஜதானிகளின் முக்கியப் பட்டணங்களில்தான் அரிய பெரிய நூல்கள் சேகரிக்கப்பட்டு வைத்திருக்க வேண்டும்; அப்படிப்பட்ட பூர்வகாலத்து முக்கிய பட்டணங்களாகிய, பூர்வ மதுரை, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் முதலிய கடலினால் கொள்ளை கொள்ளப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டிருக் கிறபடியால் இதுவும் ஓர் காரணமாயிருக்கலாம் எனத் தோற்றுகிறது.

இதற்கு மற்றொரு காரணம், மதுரைச் சங்கப் புலவர்களே யென்று ஒரு சார்பார் கூறுகின்றனர். இது முதலில் கேட்கும் பொழுது ஆச்சரியமாகத் தோன்றலாம்; அதாவது, தமிழை மேன்மைப்படுத்திப் பாதுகாத்து வந்த தமிழ்ச் சங்கத்தார், இதற்கு எப்படி காரண பூதர்களாயிருக்கக் கூடும் ? எனும் கேள்வி பிறக்கலாம்: ஆயினும் சற்று ஆராயுமிடத்து இதிலும் சிறிது உண்மையிருக்கக் கூடும் என நினைக்க இடமுண்டு. கடைச் சங்கப் புலவர்கள், தாங்கள் இயற்றிய நூல்களையன்றி மற்றவர்கள் இயற்றிய நூல்களை மதித்திலர் என்பது நிச்சயமே. அவர்கள் மற்றவர்கள் இயற்றிய நூல்களின் மீது சற்று அசூயை யுடையவர்களாயிருந்தார்கள் என்பது திண்ணம். உதாரணமாக உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் முதலிய பூர்வீக தமிழ் சிரேஷ்டர்களால் அரிய நூலென உரை எழுதப்பட்ட, திருக்குறளையும், அவர்கள் முன்பு வெகு ஆட்சேபனை செய்தே பிறகு ஒப்புக்கொண்டனர் என்பதற்கு வேண்டுமான அத்தாட்சி இருக்கிறது. ஐரோப்பியர்களாலும் புகழப்பட்ட சிறந்த கிரந்தமாகிய திருக்குறளுக்கே சங்கத்தாரால் ஒப்புக் கொள்ளப்பட இத்தனை கஷ்டமிருந்ததென்றால், ஏனையவர் இயற்றிய நூல்களைப் பற்றி, அதிலும் ஒருவாறு இழிவாக எண்ணப்பட்ட நாடக நூல்களைப் பற்றி, கேட்பானேன் ? கடைச் சங்கத்தாரால் ஒப்புக் கொள்ளப்படாமையால், அவைகள் கெளரவம் அடையாமல், அவைகளைப் பாதுகாத்துப் பெயர்த்தெழுதிக் காப்பாற்றுவாரின்றி, அநேக தமிழ் நாடகங்கள் இறந்துபோயிருக்கலாம் என்று நினைக்க இடங்கொடுக்கிறது.

இனி, மேற்கூறிய விஷயங்களினின்றும் பிறக்கும் இன்னொரு கேள்விக்கு பதில் ஆராய்வோம். பூர்வகாலத்தில் தமிழ் நாடகங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/36&oldid=1287738" இலிருந்து மீள்விக்கப்பட்டது