பக்கம்:நாடகத் தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஜனங்களை சந்தோஷிப்பிக்கும்படி நாடகங்களின் நடுவில் சொல்லப் பட்டவைகளெல்லாம், வசனமாக இருந்திருக்கலாம். அவைகள் நாடகக்கவி இயற்றினவாயல்லாது, நாடக பாத்திரங்கள் சமயோசிதமாகக் கூறின கூற்றாயிருக்கலாம். பிறகு பரம்பரையாக அவைகள் நாடக பாத்திரங்களால் மனனம் பண்ணப்பட்டுவர, நூல்களில் அவற்றுள் சிறந்தவை உட்கொள்ளப்பட்டிருக்கலாம். பிறகு அவைகள் அச்சுப் புஸ்தகங்களில் அச்சிடப்பட்டிருக்கலாம். அப்படியிருந்த போதிலும் சற்றேறக்குறைய 50 வருடங்களுக்கு முன் வழங்கி வந்த தமிழ் நாடகங்கள் பெரும்பாலும் பாட்டுகளாகவும், ஏகதேசம் வசனமாயுமிருந்தன வென்பதற்குச் சந்தேகமேயில்லை; சம்ஸ்கிருத நாடகங்களும், ஆங்கிலேய நாடகங்களும் தமிழர்களுக்கு தெரிந்த பிறகு தான் தமிழ் நாடகங்களில் வசனமானது அதிகப்பட ஆரம்பித்ததெனவே வேண்டும். 1891 இல் ஆங்கில நாடகங்களை ஒட்டி காலஞ்சென்ற சுந்தரம் பிள்ளை என்னும் கலைஞர் எழுதிய மனோன்மணியமும் பாக்களின் நடையைத் தழுவியதென்றே கருத வேண்டும். 1893-ம் வருஷத்தில் தான் முதல் முதல் பாட்டுகளின்றி வெறும் வசன நடையில் தமிழ் நாடகமானது எழுதப்பட்டது என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டியதே.

நாடகங்கள் எழுதும் நடையைப்பற்றிக் கருதுங்கால் சம்ஸ்கிரத நாடகங்களுக்கும் தமிழ் நாடகங்களுக்கும் உள்ள மற்றொரு பேதத்தைத் கவனிக்கவேண்டியிருக்கிறது. அதாவது சம்ஸ்கிரத நாடகங்களுள் பிராகிருதம் என்பது பெரும்பாலும் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதேயாம். கீழ்ப் பட்ட ஜனங்களும், ஸ்திரீகளில் பெரும்பாலரும் பிராகிருதம் பேச வேண்டுமென்று விதிக்கப்பட்டிருக்கிறது. பிராகிருதம் என்பது சம்ஸ்கிருதத்தின் சிதைவாயினும், வேறு பாஷையைப் போல் மதிக்கப்பட்டு அதற்கென்றே பிரத்யேகமாக இலக்கணமும் ஏற்பட்டிருக்கின்றது. பிராகிரதத்திலேயே அநேகம் பிரிவுகள் உண்டு. இம்மாதிரியான நிபந்தனைகள் தமிழ் நாடகங்களில் கிடையாதென்று கருதவேண்டும். நாடகங்களில் தோட்டி, பறையன் முதலிய இழிஜனங்கள் கொச்சையாகப் பேசியபோதிலும், அது தமிழாக மதிக்கப்பட்டிருக்கிறதே யொழிய வேறன்று. அன்றியும் ஸ்திரீகள் கொச்சையாகப் பேச வேண்டுமென்னும் நிபந்தனை கிடையாது.

மேற்கூறிய காரணங்களால் சம்ஸ்கிருத நாடகங்களுக்கும் தமிழ் நாடகங்களுக்கும் நிரம்ப வித்தியாசங்களிருக்கின்றனவென்றும் சம்ஸ்கிரத நாடகங்களிலிருந்து தமிழ் நாடகங்கள் பிறந்தன அல்ல வென்றும் ஊகிக்கலாம் எனத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/50&oldid=1290129" இலிருந்து மீள்விக்கப்பட்டது