பக்கம்:நாடகத் தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

இவைகளன்றி சாரங்கதார யட்சகானம், சிறுத்தொண்டர் யட்சகானம், கீலியட்சகானம், வல்லாளராஜன் யட்சகானம் என்று நான்கு யட்சகானப் பிரதிகளும் இவ்விடம் இருக்கின்றன. இவைகள் யட்ச கானம் எனும் பெயர் படைத்தவையாயினும் நாடகங்களின் பகுதியிலேயே சேர்க்கப்படவேண்டும்; இவைகள் நாடகங்களுக்குரிய உறுப்புகளைப் பெரும்பாலும் உடைத்தாயிருக்கின்றன. சிறுத்தொண்ட நாயனாருடைய கதையைக் கூறும் சிறுத்தொண்டர் யட்ச கானம் என்பது ஞானப்ரகாசம் என்பவரால் இயற்றப்பட்டது; வசனமுடைத்தாயிருக்கிறது. நீலியட்ச கானம் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த நீலன் நீலி என்னும் பேய்களின் சரித்திரத்தைக் கூறுவது; இதுதான் முன்பு கூறப்பட்ட நீலி நாடகம் என்பது போலும், வல்லாளயட்ச கானமானது வல்லாள ராஜன் கதையை நாடக ரூபமாகக் கூறுவது. இம்மாதிரியான யட்ச கானங்கள் தெலுங்கு தேசத்தில் ஆந்திர பாஷையில் அநேகம் இருக்கின்றன.


இதன் பிறகு, எனது ஆராய்ச்சிக்குக் கிட்டியவரையில், வள்ளி நாடகம், மார்க்கண்டேயர் நாடகம், என்னும் இரண்டைக் கூறவேண்டும். இவை இரண்டும் அநேக வருஷங்களுக்குமுன் காஞ்சீபுரம் கோயில் நட்டுவனான சுப்பராய நட்டுவன் என்பவனிடம் கண்டேன். இவை இரண்டும் பனை ஏட்டில் வரையப்பட்டன. அவனை விசாரிக்குமிடத்து நான்கு ஐந்து தலைமுறையாகத் தன் குடும்பத்தில் இவை காப்பாற்றப்பட்டு வந்தனவென்று தெரிவித்தபடியால், இவை சுமார் நூற்றிருபது. வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டன என்பதற்கு ஐயமில்லை. இவைகள் காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் சந்நிதியில் வசந்தோற்சவ முதலிய உற்சவகாலங்களில் சில சமயங்களில் ஆடப்பட்டன வென்றும் தெரிவித்தான்; அக்கோயில் தாசிகள்தான் இவைகளை ஆடுவது வழக்கமாம். இவைகளை நான் விலைகொடுத்து வாங்க முயன்ற பொழுது, தான் அவைகளைப் பூசித்து வருவதாயும், ஆகையால் அவைகளை விற்கக் கூடாதென்றும் கூறி வாங்கிக்கொண்டு போய் விட்டான். அந்நட்டுவன் அவைகளை அச்சிடவும் இடங்கொடுக்க வில்லை. இப்பொழுது இப் புஸ்தகங்கள் நசித்துப்போயினவோ இருக்கின்றனவோ அறிகிலேன். நாகரீகம் அடைந்திருக்கிறோமென நாம் கொஞ்சம் கர்வம் கொள்ளும் இக்காலத்திலேயே, நமது தமிழ்ப் புஸ்தகங்களின் கதி இப்படியானால், பூர்வீக காலத்திலிருந்த தமிழ் நாடகங்கள் பெரும்பாலும் நசித்துப்போனது ஓர் ஆச்சரியமன்று. மற்றவர்கள் அறிந்தால் அதன் மகிமை குறைந்து போய்விடும் எனும் எண்ணத்தினாலோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/60&oldid=1290155" இலிருந்து மீள்விக்கப்பட்டது