பக்கம்:நாடகத் தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

வேண்டியது என் கடமையாதல் பற்றி இதை இங்கு கூறலானேன். ஜீவனத்திற்காக ஆடிவரும் நாடகசபைகளில், தமிழ் நாடகங்கள் நடக்கும்பொழுதும் இன்றுவரை, ஆங்கில உடை தரித்த இந்த பப்பூன்பார்ட் என்னும் ஆபாசம் இருப்பதைக் காணலாம். ஒரு முக்கியமான விஷயத்தில் மாத்திரம் இக்காலத்து நாடக கம்பெனிகளெல்லாம், புராதனமான தெருக்கூத்துகளை ஒத்திருந்தன; அது என்னவென்றால், இந்நாடகக் கம்பெனிகளிலும் பின்பாட்டு என்பது இருந்தது; தற்காலம் வரையிலும் இருக்கின்றது. இப்பொழுது தான் கொஞ்சங்கொஞ்சமாக விடப்படுகின்றது. இக்காலத்தில் இந்த நாடகசபைகளிலெல்லாம் நாடக பாத்திரங்கள் ஆண் மக்களாகவே யிருந்தார்கள். முதல் முதல் ஸ்திரீகள் நாடகசபையைச் சேர்ந்து ஆடியது பாலாமணியெனும் பெண்பாலின் சபையிலேயே. அதற்குமுன் ஏகதேசமாக எப்பொழுதாவது டம்பாச்சாரி விலாசத்தில் மதனசுந்தரி வேஷம் மாத்திரம் பரத்தையர் போட்டதுண்டு, இந்த பாலாமணி கம்பெனியில் நாடகபாத்திரங்களெல்லாம் பெரும்பாலும் ஸ்திரீகளாலேயே தரிக்கப்பட்டன. இவர்கள் ஆடிய தமிழ் நாடகங்களில் பெரும்பாலும் சங்கீதமே நிறைந்திருந்தது என்று கூறாமலே தெரிந்துகொள்ளலாம். அன்றியும் குல ஸ்திரீகள் இவர்கள் ஆடிய நாடகங்களைப் பார்க்க அக்காலத்தில் அருவருப்புடையவர்களாயிருந்தனர் என்றே கூறவேண்டும்.

1891 வருஷம் தமிழ் நாடக மடந்தைக்கு ஒரு முக்கியமான வருடம் என்று கூறவேண்டும். இந்த வருஷம்தான் காலஞ்சென்ற தமிழ் அபிமானியாகிய சுந்தரம் பிள்ளை அவர்கள் புதிய முறைப்படி "மனேன்மணியம்" எனும் தமிழ் நாடகத்தை அச்சிட்டு வெளியிட்டதாகக் கூறியுள்ளேன். அன்றியும் இவ்வருஷம் தான், ஜீவனத்தின் பொருட்டன்றி, தமிழ் பாஷையினிடத்துள்ள அன்பின் பொருட்டு தமிழ் நாடகங்களை நடத்த, சுகுணவிலாச சபை முதலிய சபைகள் பிறந்தன. இதுவரையில் கலாசாலையில் வாசிக்கும் சிறுவர்கள் எப்பொழுதாவது ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் முதலிய நாடகாசிரியர்களுடைய நாடகங்களே ஆடும் வழக்கமுண்டு. தமிழில் நாடகம் ஆட வேண்டுமென்று அவர்கள் கனவிலும் நினைத்தவர்களல்ல என்று உறுதியாய்க் கூறலாம். அதற்கு சில முக்கியமான காரணங்கள் இருந்தன; அவற்றுள் முதலாவது, தமிழ் நாடகங்கள் ஜீவனத்திற்காக அவைகளை ஆடுபவர்கள் கையிற்பட்டு, ஹீனஸ்திதியையடைந்ததாகும். அவர்களில் பெரும்பாலர் நன்னடக்கையில்லாதவர்களாயும் கல்வி அறிவு இல்லாதவர்களும் துர்மார்க்கர்களாயுமிருந்தபடியால் நாடகமாடுவதே நிந்தைக்கு ஆளாயது. ஒருவனை இழித்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/85&oldid=1296539" இலிருந்து மீள்விக்கப்பட்டது