பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறாமை, எனவே துறவி ஒரு நாள் அரசனிடம் சிற்றின்பம் குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர், ‘துறவிக்குச் சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்போலும்’ என்று ஏளனமாகப் பேசினார். துறவி, அமைச்சரின் கருத்துக்கு அப்போது பதில் சொல்லவில்லை.

சில நாள் கழித்துத் துறவி ஏவலரிடம் துருப்பிடித்த வெண்கலப் பாத்திரம் ஒன்றை எடுத்து வரும்படி அரசர் மற்றும் அமைச்சர் முன்னிலையில் சொன்னார். அந்தப் பாத்திரத்தை மலத்துடன் சேர்த்து மண்ணில் புதைத்து வைக்கும்படி கூறினார். சில நாள் கழித்து அரசன் மற்றும் அமைச்சரின் முன் ஏவலாளர் மூலம் அந்தப் பாத்திரத்தை மண்ணில் இருந்து எடுக்கும்படி கூறினார். அப்பாத்திரம் பிரகாசமாயிருப்பதைத் துறவி அரசனிடம் காட்டினார். அருகிலிருந்த அமைச்சர், துறவியிடம், ‘இதிலென்ன புதுமை? மலத்தின் புளிப்பு வெண்கலப் பாத்திரத்தில் இருந்த களிம்பை நீக்கிவிட்டது’ என்று விளக்கிக் கூறிய அமைச்சரை நோக்கி, ‘அமைச்சர் மலத்துடன் அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார் போலும்’ என்று பதில் உரைத்தார் துறவி.

படைப்பாளர்கள் தங்களுடைய படைப்புகளை அவர்கள் வாழ்வுப் பட்டறிவின் மூலமும், நண்பர்களின் அனுபவங்களின் மூலமும், செவிவழிச் செய்திகளின் மூலமும் படைப்பர். எனவே ‘தாசிப்பெண்’ என்ற நாடகத்தில் பம்மல் சம்பந்தனார் கருத்துப்படி அவர் தாசியோடு தொடர்பு இல்லை என்ற கருத்தை இக்கதையின் வழி அவருக்கு அறிவுறுத்துகிறார்.

பம்மல் சம்பந்தனார் 1891இல் பதினெட்டு வயதில் நாடக மேடை ஏறி நடிக்கத் தொடங்கினார். அத்துடன் நாடகங்களை எழுதவும் தொடங்கினார். அவருடைய பணி அவர் இறக்கும் வரை நீடித்தது. நீண்ட காலம் நாடகத் துறையில் இருந்ததால் அவருடைய நாடக அனுபவங்கள் நமக்கு வழிகாட்டத்தக்கன.

தொடக்கக் காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாருக்கு நடிப்பில் போதிய பயிற்சி இல்லை என்பதை அவரே இந்நூலில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். பின்பு நடிப்புத் துறையில் தேர்ச்சி பெற்ற விவரத்தையும் விளக்கியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார் பல்வேறு நாடகங்களை நடத்தியதுடன் மற்ற நாடகக் குழுக்களின் நாடகங்களைப் பார்த்து அவற்றில் வரும் புதிய உத்திகளைத் தன்னுடைய நாடகங்களிலும் கையாண்டார்.

‘மதராஸ் டிராமடிக் சொசைட்டி’ என்னும் பெயரில் அமைந்த நாடகக் குழு நடத்திய நாடகங்களில் காட்சிகளுக்கு ஏற்பவும் இடங்களுக்கு ஏற்பவும் திரைகளைப் (Scenic arrangements) பயன்படுத்தியதைக் கண்ணுற்ற பம்மல் சம்பந்தனார், தன்னுடைய நாடகங்களிலும் அந்த முறையைப் பின்பற்றினார்.