பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

நாடக மேடை நினைவுகள்


இப்பாட்டுகள், தமிழும் ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள நடையிலெழுதப்பட்ட வெண்பாக்கள் என்பார் ஷண்முகம் பிள்ளை! இவ்வாறு வெளியில் வேடிக்கை பண்ணுவதுபோல், நாடக மேடையிலும் ராஜகணபதி முதலியாரை ஏளனம் செய்வது சுலபமாயிருக்குமென்று எண்ணி, வசந்தனாகிய ராஜகணபதி முதலியாருக்கு வேடிக்கைத்தோழனாக விகடனாகிய ஷண்முகம் பிள்ளையை நியமித்தேன். வெங்கடகிருஷ்ண பிள்ளை என்பவர் தொழிலிலே வைத்தியராக இருந்தபடியால், அவருக்கு அமிர்தகேசரி வேஷம் கொடுக்கப்பட்டது. இம்மனோஹரன் நாடகத்தில் ஒரு காட்சியில் இந்த வைத்தியருடைய பூரணாதி லேகியத்தைச் சாப்பிட்டுவிட்டு விகடன் மயங்கிக்கிடக்கிறான். இது எழுதியதற்கு ஒரு வேடிக்கையான காரணம் உண்டு. நானும் என் நேர் சகோதரன் ஆறுமுக முதலியாரும் சிறுவர்களாயிருந்த பொழுது, எங்கள் வீட்டில் வைத்தியர் ஒருவர், ஒரு நாள் தன் கடைக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டி சித்தம் செய்த பூரணாதி லேகியத்தைக் கொஞ்சநேரம் வைத்துவிட்டு வேறு வேலையாகப் போயிருந்தார். அவர் வைத்துவிட்டுப் போனது பூரணாதி லேகியம் என்றும் அதன் குணம் இப்படிப்பட்டதென்றும் எங்களிருவருக்கும் தெரியாது; எங்கள் தாயார் எங்களுக்கு எப்பொழுதுதாவது சுக்கு லேகியம், மிளகு லேகியம் ஜீரண சக்திக்காகக் கொடுப்பதுண்டு. அதுபோல இது ஒன்று என்றெண்ணி, அப் பூரணாதி லேகியத்தில், நாங்கள் இருவரும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டோம்! பிறகு மூன்று நான்கு மணி சாவகாசம் வரையில் வெறி பிடித்தவர்கள் போல் நாங்கள் குழப்பஞ் செய்ததாக எங்கள் வீட்டிலுள்ளவர்கள் சொல்லக் கேட்டோம்; எங்களுக்கு நாங்கள் இன்னது செய்தோம், இன்னது பேசினோம் என்பது தெரியாது! பலதரம் இதைக்குறித்து எங்கள் அண்ணன்மார்கள் எங்களை ஏளனம் செய்ததுண்டு; இந்த அனுபவத்தைக் கொண்டுதான், பூரணாதி லேகியக் காட்சி எழுதினேன். இதை வெங்கட கிருஷ்ண பிள்ளையும் ஷண்முகம் பிள்ளையும் மிகவும் வேடிக்கையாக நடித்தார்கள். இம் மனோஹரன் என்னும் நாடகத்தில் புருஷோத்தமனுடைய குருவின் பாகம் ஒன்றுண்டு; அது சிறிதானதே; ஆயினும் முக்கியமானது. இதை ஒத்திகைகள் நடத்தும் பொழுது ஒருவருக்குக் கொடுத்திருந்தேன். அவர்