பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

நாடக மேடை நினைவுகள்


யெல்லாம் மேற்கொண்டார்; முதலில் 20 அல்லது 30 ஸ்திரீகள் வர ஆரம்பித்துப் பிறகு நூற்றுக்கணக்காகி, ஒரு வருஷம் ஆயிரம் ஸ்திரீகளுக்கு மேல் வந்தார்கள் என்று சொல்வது மிகையாகாது. முதல் வருடங்களில் 20 அல்லது முப்பது ரூபாய் செலவழித்தவர் பிறகு நூறுக்கு மேலாகி, சில வருஷங்களில் 500, 600 ரூபாய் செலவழித்தது எனக்குத் தெரியும். ஒரு வருஷம் விக்டோரியா ஹாலில் இடம் போதாமல், சவுத் இந்தியன் அத்லெடிக் அசோசியேஷனில் இத் தினக் கொண்டாட்டத்தை வைத்துக் கொண்டபோது, இவர் 700 ரூபாய் இந்த ஒரு தினத்திற்காகச் செலவழித்தார். அப்பொழுது என்னை அழைத்து, “சம்பந்தம், வருகிற வருடம் முதல், செலவானது நூறு எண்களுக்குமேல் போகாமலிருக்கும்படி பார்த்துக் கொள்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னது எனக்கு ஞாபகமாயிருக்கிறது. சென்னையில் அநேகம் செல்வந்தர்களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் அவர்களுள் சத் விஷயங்களில் முகங்கோணாது சந்தோஷமாய் ஏராளமாய்ச் செலவழிக்கும் இவரைப் போன்றவர்கள் மிகவும் சிலரே எனக் கூற வேண்டும். இவர் ஸ்ரீமான் சேஷகிரி ஐயருக்குப் பிற்காலம் எங்கள் சபையில் அத்யட்சர் ஆனவரையில், தசராக் கொண்டாட்டத்தில் இத் தினக் கொண்டாட்டத்தை மிகவும் விமரிசையாக நடத்தி வந்தார். அதன் பிறகு இந்நாள்வரை, அத்யட்சகர் தினத்தை நடத்தி வருகிறார்.

மேற்சொன்னபடி தசராவில் ஸ்திரீகளுக்கு ஒரு நாள் ஏற்படுத்திய பொழுது, நியாயப் பிரகாரம் குழந்தைகளுக்கும் ஒரு நாள் ஏற்படுத்த வேண்டியதாயிற்று. “குழந்தைகள் தினத்தில்” அங்கத்தினர் வீட்டிலுள்ள குழந்தைகளையெல்லாம் வரவழைத்து, அவர்களுள் பாடத் தெரிந்தவர்களையெல்லாம் பாடச் சொல்லி, ரெசிடேஷன் (Recitation) ஒப்புவிக்கத் தெரிந்தவர்களை யெல்லாம் ஒப்புவிக்கச் சொல்லி, அவர்களுக்கெல்லாம் பரிசுகள் கொடுத்து, பிறகு எல்லாக் குழந்தைகளுக்கும் (50, 60 வயதுடைய குழந்தை கள் உட்பட) சிற்றுண்டியளித்து, ஏதாவது இரண்டொரு ஹாஸ்யக் காட்சிகள் ஆடி அவர்களைக் களிக்கச் செய்து, அவர்களை எல்லாம் தத்தம் இல்லங்களுக்கு அனுப்புவது வழக்கமாயிற்று. இத் தினக் கொண்டாட்டத்தில் சில சமயங்