பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

நாடக மேடை நினைவுகள்


மிகவும் நுட்பமாய் ஆராய்ந்து அதன்படி நடிக்கும் சிறந்த சக்தி வாய்ந்தவர். இவர் மேற்குறித்த இரண்டு நடர்களைப் போல் அற்பாயுசுடையவராயன்றி, அநேக வருஷம் வாழ்ந்திருந்தார். வயோதிகரான பிறகும் ஸ்திரீ வேஷம் தரித்து வந்தார். நான் பிறகு எழுதிய நாடகமாகிய லீலாவதி சுலோசனாவில் இவர் லீலாவதியாக நடித்தார். இவரை நான் கடைசி முறை பார்த்தது அந்த வேஷத்தில்தான். இவர் அந்த லீலாவதியாக நடிப்பதைப் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் கூறவேண்டி வரும்.

அன்றைத்தினம் விதூஷகனாக வேடம் பூண்ட பஞ்சநாதராவ் அவ்வேடத்தில் தனக்கு நிகரில்லை என்று பெயர் பெற்றவர். அவரை அவரது நேயர்கள் ‘பஞ்சு’ என்றும் ‘பஞ்சண்ணா’ என்றும் அழைப்பார்கள். ஸ்தூல தேகமுடையவராயிருந்தார். அக்காலத்திய வழக்கத்தின்படி விதூஷகனாக வரும் பொழுதெல்லாம் முதலில் நர்த்தனம் செய்தே பிறகு தான் சொல்ல வேண்டிய வசனத்தை ஆரம்பிப்பார். இவர் இந்த வேஷத்தில் எப்பொழுதும் பூணும் ஆடையானது ஆங்கிலேய கிளொன் (Clown) அல்லது பப்பூன் (Buffoon) உடையேயாகும்! சராயும் சொக்காயும் அப்படியேயிருக்கும். பல வர்ணங்களுடையதாய இந்த உடுப்பிற்கு இவர் பரிகாசமாய் சோபா (Sofa) டிரஸ் என்று பெயர் வைத்தார். அதாவது சோபா முதலிய நாற்காலிகளுக்குப் போடும்படியான உடுப்பு என்று அர்த்தமாகும். தலையில் மாத்திரம் வெள்ளைக்கார பபூன்களைப் போல் கோணக் குல்லாய் அணிவதில்லை. ராமாயணக் கதையாயிருக்கட்டும், பாரதக் கதையாயிருக்கட்டும், தாராசசாங்க மாயிருக்கட்டும், என்ன நாடகமாயிருந்தபோதிலும் இவருக்கு இந்த விதூஷகன் உடுப்பு ஒன்றே; சாதாரணமாக பாத்திரங்களுக்கேற்றபடி உடைகள் அணியச் செய்த கோவிந்தசாமி ராவ் அவர்கள் இந்த ஆபாசத்தை ஏன் சீர்திருத்தாதிருந்தாரோ காரணம் அறிகிலேன். அது சாங்கிலி நாடகக் கம்பெனியாருடைய வழக்கம். இந்தப்படி விதூஷகனாக வந்த இவருக்கு இன்ன காட்சியில் தான் வரலாம், இதைத்தான் பேசலாம் என்னும் வரையறை கிடையாது. தனக்கிஷ்டமானபடி எந்தக் காட்சியிலும் நடுவில் வந்துவிடுவார். தாரையும் சந்திரனும் அந்தரங்கமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் சமயத்திலும் நடுவில் நுழைந்துவிடுவார்!