பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

35


அன்றியும் நாடகக் கதைக்குப் பொருத்தமானதோ இல்லையோ ஜனங்களுக்கு சிரிப்பையுண்டாக்குமென்று தோன்றினால் எதை வேண்டுமென்றாலும் பேசி விடுவார். இக்குறை அவரைப் பொறுத்ததன்று. அக்காலத்திய நாடகங்களின் வழக்கத்தைப் பொறுத்ததாகும். முக்கியமாகத் தன் ஆசிரியராகிய கோவிந்தசாமி ராவையே சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் அரங்கத்தின் மீது ஏளனம் செய்து விடுவார். உண்மையில் மிகுந்த புத்திக்கூர்மை வாய்ந்தவரென்றே கூறவேண்டும். சந்தர்ப்பத்திற்குத் தக்கப்படி திடீரென்று புத்தி சாதுர்யமாக விகடம் செய்வதில் இவர் மிகுந்த நிபுணராயிருந்தார். இவர் வேடிக்கையாய்க் கூறிய பல சமாசாரங்களை நான் எனது நாடகங்களில் சில இடங்களில் உபயோகப்படுத் தியிருக்கிறேன். இவர் நாடக மேடையில் வந்தவுடன் ஜனங்களெல்லாம் நகைக்க சித்தமாயிருப்பார்கள். இவர் ஏதாவது அசௌக்கியமாய் ஒரு தினம் வேஷம் தரிக்கா விட்டால், அன்றைக்கு காலரி (Gallery) வகுப்பில் பெரும் குழப்பமுண்டாகும். இவரும் காலகதியால் க்ஷணதசைக்குப் பிறகு வந்துவிட்டதை நினைத்து இப்பொழுதும் நான் துக்கப்படுகிறேன். கடைசியில் சில வருஷங்களுக்கு முன் நான் பார்த்தபொழுது, தனது ஹாஸ்ய வார்த்தைகளையெல்லாம் மறந்து வெறும் மரப்பாவையைப் போல அரங்கத்தின் மீது வந்து நிற்பார். நான் ஆச்சரியமும் பரிதாபமும் கொண்டனவாகி, இவர் மாறியிருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்த பொழுது, இவருக்கு யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். இது எவ்வளவு உண்மையோ அறியேன் நான். ஆயினும் அச்சமயம் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய பிரசித்தி பெற்ற நாடகமாகிய ஹாம்லெட் என்னும் நாடகத்தில், ஹாம்லெட், தன் தந்தையின் அரண்மனை விதூஷகனான யாரிக் (Yorick) என்பவனைப் பற்றிக் கூறிய வார்த்தைகள், எனக்கு நினைவுக்கு வந்தன. “அவனை நான் நன்றாய் அறிவேன். அபாரமான விகடமுடையவன், அதிசூட்சும புத்தியுடையவன். இப்பொழுது உன் விளையாட்டுகள் எங்கே? வினோதங்கள் எங்கே? ஆடல்கள் எங்கே? பாடல்களெங்கே? சபையோரை எல்லாம் சந்தோஷத்தால் ஆரவாரிக்கச் செய்யும் உனது சாதுர்ய மொழிகள் எங்கே?