பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

548

நாடக மேடை நினைவுகள்


காட்சியில், வெளியிற் போய் அக்காட்சி எவ்வாறு நடக்கிறதெனப் பார்க்க சாத்தியமில்லை; இந்த நாடக சபையில் இது சாத்தியமாயிருந்தது. தரித்த வேஷத்துடன் இந்தச் சுரங்க வழியாக, பக்க வாத்தியக்காரர்களிருக்குமிடம் போய் உட்கார்ந்திருந்து பார்த்துவிட்டு, ஹாலில் வந்திருப்பவர்கள் ஒருவரும் அறியாதபடி, திரும்பி வரச் சாத்தியமாயிருந்தது. இந்தக் சூழ்ச்சியை அறிந்தவுடன் எங்கள் ஆக்டர்களெல்லாம் ஒவ்வொருவராக இந்த வழியாகப் போய் உட்கார்ந்து பார்த்து களித்து வந்தார்கள்; நானும் அங்ஙனமே செய்தேன். மற்ற நாடக சாலைகளிலும் இம்மாதிரியான ஏற்பாடு இருக்குமாயின் மிகவும் சௌகர்யமாயிருக்கும். சீமை முதலிய இடங்களில் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தென் இந்தியாவில் இதை இந்த நாடக சாலையில்தான் கண்டேன். இந் நாடக சாலையை இவ்வளவு சௌகர்யமாக அமைத்த அதன் புரொப்ரைட்டர் வின்சென்ட் என்பவர் இங்கு வந்தாடும் சபைகளுக்கெல்லாம் கூடிய சௌகர்யங்களை எப்பொழுதும் செய்து வருவதாகக் கேள்விப்பட்டேன். எங்களுக்கும் அப்படியே தானாக வேண்டிய சௌகர்யங்களை யெல்லாம் மனமுவந்து செய்து வந்தார். அவர் ஒருக் கால் இதை வாசிப்பாராயின், நான் இங்கெழுதியதையே என் மனமுவந்த வந்தனமாகக் கொள்வாராக!

இவ்வூரில் எங்கள் முதல் நாடகமாகிய “லீலாவதி சுலோசனா” நாடக தினம், நாடகக் கொட்டகைக்குப் போவதற்காக எல்லா ஆக்டர்களையும் அழைத்துக் கொண்டு நான் புறப்பட்டபொழுது நடந்த ஒரு சிறு விஷயத்தை இங்குக் குறிக்க விரும்புகிறேன். எந்தக் காரியத்தை நான் ஆரம்பிப்பதாயினும் விக்னேஸ்வரரைத் தியானம் செய்துவிட்டு ஆரம்பிப்பது சிறு வயது முதல் என் வழக்கம். அப்படியே என் மனத்தில் தியானம் செய்துவிட்டு, எனது ஆக்டர்களை அழைத்துக்கொண்டு புறப்பட, நான் நாங்கள் குடியிருந்த வீட்டின் படிக்கட்டை விட்டு இறங்கியவுடன், யாரோ தெருவில் போய்க் கொண்டிருந்தவன் பலமாகத் தும்மினான். உடனே என் பின்னால் நின்று கொண்டிருந்த எனது நண்பர் ராம கிருஷ்ண ஐயர், “வாத்தியார்! எவனோ தும்முகிறான்,