பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நாடக மேடை நினைவுகள்


நாடகமாடுவ தென்றால் அவருக்குக் கொஞ்சமேனும் பிடிக்காது; ஆகவே இரண்டு மூன்று வருடங்கள் வரையில் ரங்கசாமி ஐயங்கார் நாடகமாடுவதை அவர் தந்தை அறியாதபடி மறைத்து வைக்க வேண்டியிருந்தது! ஏழு எட்டு மணிக்கெல்லாம் அவர் தந்தை சாப்பிட்டுப் படுத்துக்கொண்ட பின், தனது தாயாருடைய அனுமதி பெற்றுத் தெருக் கதவை மெல்லத் திறந்து கொண்டு நாடகமாட வந்து விடுவார். நாடகம் முடிந்தவுடன் வீட்டிற்குத் திரும்பிப் போகும் பொழுதும் தனது தாயாரிடம் முன்பே சொல்லிவைத்து, மெல்ல தெருக் கதவைத் தட்டி அவர்களைத் திறக்கச் செய்து தந்தை அறியாதபடி வீட்டிற்குள் நுழையந்து சந்தடி செய்யாமல் தன் அறைக்குப் போய் படுத்துக் கொள்வார். அக் காலத்தில் நாடகமாடுவ தென்றால் அவ்வளவு நிகருஷ்டமாக எண்ணப் பட்டது. இப்பொழுதும் அம்மாதிரியான எண்ணம் இந்நாட்டை விட்டு முற்றிலும் அகலவில்லை யென்றே நான் எண்ணுகிறேன்.

நான் கதாநாயகனுடைய நண்பனாகிய சத்யவந்தன் என்பான் வேடம் தரித்தேன். கதாநாயகனுடைய தந்தையாகிய அரசனுடைய வேஷம் கோதண்டபாணி நாயகர் தரித்தார். இவர் ஜெயராம் நாயகருடைய மூத்த தமயன். எங்களுள் எல்லோரைப் பார்க்கிலும் இவர்தான் அக்காலத்தில் வயதில் முதிர்ந்தவர். அச்சமயம் இவருக்கு ஏறக்குறைய நாற்பது வயதிருக்குமென நினைக்கிறேன். அதற்கு முன் இவர் நாடகமேடையே ஏறியவர் அன்று. இருந்தும், நாடகமாட வேண்டுமென்று விருப்பங்கொண்டவராய் ஜெயந்தன் எனும் அரச பாத்திரமாகத் தோன்றினார். இதைத் தவிர இவர் வேறு நாடகங்களில் ஆடியதாக எனக்கு ஞாபகமில்லை இவர் அக்காலம் சென்னை ஹைகோர்ட்டில் ஏதோ வேலை யாயிருந்தார்.

இவருடைய நண்பராகிய நரதாச்சார்லு என்பவர் இவர் மனைவியாகிய ராஜபத்னி வேஷம் தரித்தார். இவர் தெலுங்கு சப்தரத்னாகரம் என்னும் நூல் இயற்றிய சீதாராமாசார்லுவின் புதல்வர். மெல்லிய சாரீரத்துடன் பாடுவார். ஸ்திரீவேஷத்திற்கு லாயக்கானவர்; ஆகியும் உரத்த சப்தத்துடன் பேச முடியாதவர். இவர் சபையில் பிறகு இரண்டொரு வேஷங்கள் தான் தரித்தார். இவர் சுமாராக வீணை வாசிப்பார். சுந்தரி நாடகத்தில் முதற் காட்சியில் இவர் வீணை வாசிக்கும்படியான சந்தர்ப்பத்தை இவருக்காக ஏற்படுத்தினேன்.