பக்கம்:நாடும் ஏடும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டாடினர். நானும் போயிருந்தேன். திரு. மே. வீ. வேணுகோபாலன் என்பார் தலைமை தாங்கினார். நம் மதிப்பிற்குரிய நண்பர் திரு. மா. இராசமாணிக்கம் அவர்கள் சொற்பொழிவு ஆற்றுங்கால் ஓர் ஐயவினா தரப்பட்டது கூட்டத்திலுள்ள சிலரால். ”சிவம்” என்னும் சொல் வடமொழியா? அன்றித் தமிழா என்பதே அவ்வையவினா. அதற்கு திரு. இராசமாணிக்கம் அவர்கள் சிவம் என்பது தனித் தமிழ்ச் சொல் தான் என்றார். தலைவர் திரு. வேணுகோபாலன் அவர்கள் தன் முடிவுரையில் சிவம் என்னும் சொல் தமிழல்ல; அது வடமொழிதான் என்று வன்மையாகக் கூறினார். உடனே இராசமாணிக்கனார் எழுந்து வேணுகோபாலரைப்பார்த்து அது தமிழ்ச் சொல்தானே; மற்றும் அது மறைமலையடிகள் கருத்தாயிற்றே என நவில; வேணுகோபாலர் சபையோரைப் பார்த்து "அந்த மறைமலையடிகள் கருத்திருக்கட்டும்; இந்த வேணுகோபாலன் சொல்லுகின்றேன் சிவம் என்னுஞ்சொல் வடமொழிதான் என்று, என்று கூறிமுடித்தார். இவ்விதம் வழக்காரும் வழக்கத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு மீளாக் குழப்பத்தில் திளைக்கின்றனர். அவர்களின் பெருமையெல்லாம் பன்னூற் பாண்டித்ய மெல்லாம் மற்றவர்களின் நூல்களில் குற்றங் குறை காண்பதில் உறுதென உள்ளத்தில் உறுதி கொண்டுள்ளனர். மற்றொருவர் சொல்லில், நூலில் காவியத்தில் குறைகாணாவிடில் தம் திறமை முற்றும் முதிர்ந்ததல்ல என்ற மூட நம்பிக்கையை மூல மந்திரமாகக் சொண்டிருக்கின்றனர். என்னே! இவர் தம் அறிவும், ஆற்றலும், படிப்பும் பண்பும் செல்லுமாறு? மற்றும் ஒருவர் எழுதும் ஏட்டிற்கு மற்றொருவர் மறுப்பும் அம்மறுப்பிற்கு மறுப்பாகப் பிறிதொரு ஏடு எழுதுவதும் இந்நாட்டின் அன்றாட நிகழ்ச்சிகளாய் நீடிக்கின்றன. சான்றாக இன்று தலைமை தாங்கும் அறிஞர் ஒரு நல்ல ஏட்டை நாட்டிற்கு நல்கினார் என நினைமின்.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/15&oldid=1547509" இலிருந்து மீள்விக்கப்பட்டது