பக்கம்:நாடும் ஏடும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மற்றும் அதில் யாதொரு குற்றங்குறைகளுமில்லை யெனவும் கொள்மின். அதிலே சொற்செறிவும் பொருட் செறிவும் பொருந்தி இருக்கலாம். இலக்கிய ரசமும் காவியக் குழைவும் எதுகை மோனைகளின் இயற்கை யமைப்பும் சரிவர அமைக்கப்பட்டிருக்கலாம் கலைப் பண்பாடு மிகுந்திருக்கலாம். கருத்துப் பிழை கடுகத்தனையும் காணக் கிடைக்காதிருக்கலாம்; என்றாலும் புலவர் எவரையேனும் அதுபற்றி அபிப்பிராயம் கேட்டால் அவர் அது முற்றும் நல்ல நூல் என்று தீர்ப்புக் கூறார். குறையேதேனும் காண்டல் அன்றோ அவர் தம் அறிவுடைமைக்குப் பூஷணம், புலமைக்கு அணிகலன்; ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டு. எனவே அவர் "இந்நூலாசிரியர் செய்ததெல்லாம் சரிதான் ஆனாலும் நூல் முற்றிலும் அவருடைய சொந்தமன்று; முற்றம் இரவல். அதில் 100-க்கு 20 பாகம் திருக்குறளையும் 20 பாகம் சிலப்பதிகாரத்தையும் 20 பாகம் சங்க நூற்களையும் 10 பாகம் மணிமேகலையையும் இவ்வண்ணமாக ஒரு நூலிலிருந்து ஓர் முத்தையும் மற்றொரு நூலிலிருந்து மாணிக்கத்தையும் பிறிதொரு நூலிலிருந்து பிறிதொரு வைரத்தையும் பொறுக்கி எடுத்துக் கோத்திருக்கின்றார்" என்று அவர்பால் குற்றங்காண்பர் இதுவே தம் கடன் என்று பணியாற்றும் புலவர் பெருமக்களை என்னென்று இயம்புவது.


இலக்கியப் பண்டிதர்களும் பண்டித மணிகளும் பாவலர்களும் மற்றுமுள்ள கலைஞானிகளும் கலா ரக்ஷகர்களும் நாட்டைப்பற்றி, நாட்டிலே வதியும், தமிழ் நாட்டிலே வாழும் நாலரைக் கோடி மக்களைப்பற்றிக் கவலையுறார். எண்ணியும் பாரார். எவர் சொல்லையும் கேளார்; நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பு கலப்பு உண்டா? இல்லையா? என்றும் தம் கண் கொண்டு பாரார். "எல்லாமறிவோம் யாம்; என இறுமாந்து இன்புறுவர். நாட்டில் நடமாடும் ஏடுகளின் வழி, ஊட்டும் உணர்ச்சிகள் ஊடே, ஏற்றும் எண்ணங்களின் ஏவற்படிதான் நாட்டு மக்கள் செயலாற்றுவர் என்பது இவர் தம் சிந்தனைச் சுடரிலே சிறிதும் தோன்றுவதில்லை. நாட்டின் நிலைக்கேற்ற நிகண்டுகள் நிச்சயம் தேவை என்பதை நினைத்துப் பார்ப்பதும் இல்லை. நாட்டு ஏடுகள் எடுத்தியம்புவது என்ன ?

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/16&oldid=1547534" இலிருந்து மீள்விக்கப்பட்டது