பக்கம்:நாடும் ஏடும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்தியை பரிசோதிக்க சிவனார் இயற்பகையிடம் சென்றார். சென்று "இல்லை யென்னாதீயும் இயற்பகை நீதானோ" என்று கேட்டார். அதற்குத் தலை வணங்கிய இயற்பகையை நோக்கி "ஆயின் உம் இல்லக்கிழத்தியை எம்மோடு அனுப்புக" என்றார். இயற்பகையும் மிக மகிழ்ந்து தம் மனையாளை அவருடன் அனுப்பினார். இது முறையன்றெனத் தடுத்த முதியோரையும் "அடாது" என அறிவுறுத்திய அறிவாளரையும் "கூடாது" எனக் கூறிய சுற்றத்தாரையும் கொன்று குவித்து, இயற்பகையார் தம் மனையாளுடன் சிவனார் சிறிதும் தடையின்றிச் செல்லுமாறு செய்தார். பின்னர் சிவனார் தம் திருவுருவங்காண்பித்து அவரை ஆட்கொண்டனராம். என்னே! சிவனாரின் திறம்.

தோழர்களே! உங்கள் சிந்தனைக்குச் சற்று வேலை கொடுங்கள். இயற்பகை தன் வாழ்க்கைத் துணைவியைக் கூட மதத்தின்பால் தன் மதியை அடகு வைத்திருந்தமையால் பிறனுடன் பிரியத்தோடு அனுப்பிவைக்கும் நிலையை அடைந்தார். மனைவியை வேண்டிய சிவனார் தான் நேரில் வந்து கேட்டனரா? இல்லை; பிராமண வடிவங்கொண்டு வந்து கேட்டார். யார்? நம்முடைய சிவனார். எப்படிப்பட்ட பிராமண வடிவம்? தூர்த்தப பிராமண வடிவங்கொண்டு வந்தார். இதற்குப் பொருள் திரு. வி. க. நடையிலே கூற வேண்டுமானால் காந்தகாரங்கொண்டு கட்டழிந்த தோற்றத்தோடு கூடிய பிராமணன் என்பதாகும். இத்தகைய பிராமணன் கேட்டபோது கூசாமல், எண்ணாமல்; ஏதும் கேட்காமல் தம் மனையாளைத் தந்தார் இயற்பகையார். சிவனாருக்கும் வேறு சோதனை கிடைத்திலபோலும், இதைத் தவிர பக்தனைப் பரிசோதிக்க; காமாந்தகாரங்கொண்ட பிராமணனுடன் மனைவியை, அவளை யேதுங் கேட்காமல் அனுப்பி வைத்த மாண்பு எதை விளக்குகின்றது? பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்பதையல்லவா? கணவன் பக்தியைத் தானே பரிசோதிக்க வந்தார் கடவுள். தன்னை ஏன் பரிசோதிக்க வேண்டும்; தான் ஏன் கணவனை விட்டு அகல வேண்டும் என்ற கருத்து அவர் தம் மனைவியாருக்குத் தோன்றவில்லை போலும்! கணவனுக்கு மனைவி அடங்குதல் வேண்டும்.

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/27&oldid=1545376" இலிருந்து மீள்விக்கப்பட்டது