19
பெயர்ப்பாளர் இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டோம். பிறகு எல்லோருமாக, விமான நிலையத்தின் பயணிகள் தங்கும் கூடத்திற்குச் சென்றோம். அது மாடியில் இருந்தது. பெருங்கூடமாக இருந்தது. வசதியான இருக்கைகள் இருந்தன. தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது; பெட்டி பேழைகளெல்லாம் விமானத்திலிருந்து சுங்கச் சாவடிக்கு வருவதற்காக எல்லோரும் இக் கூடத்தில் காத்துக்கொண்டிருந்தோம்.
திடீரென, எங்கள் மூவர் பெயரும் ஒலிபெருக்கியின் மூலம் கேட்டது. டாக்டர் உங்களைக் கூப்பிடுகிறார்’ என்று மொழிபெயர்ப்பாளர் சொன்னார். துணை அமைச்சர் முன்னே சென்றார். அவர் பின்னால் தலைவர் இராசாராய் சிங் சென்றார். அவரைத் தொடர்ந்து அம்மையார். கடைசியாக நான்.
'இம்மருந்தைக் குடி' என்றார் டாக்டர்.
'நார்மல்' - முணுமுணுத்தார் சிங்,
'ஆம்! குடி’ என்று டாக்டர் கெட்டியாகக் கூறினார். சிங் ஒரு டோஸ் மருந்தை ஒரே மூச்சில் குடித்துவிட்டு முகத்தைக் கோனினார். எனினும் விடவில்லை. இன்னொரு டோஸ் மருந்து-வேறு வகையானது-அவரிடம் கொடுக்கப்பட்டது. அதையும் 'மொடக்’கென்று குடித்துவிட்டார். அடுத்து அம்மையார் பங்கு அவர் முணுமுணுப்பும் பலிக்கவில்லை. கடைசியாக என் பங்கு. நான் மருந்துகளுக்கு மட்டுமே வாய் திறந்தேன். ஆளுக்கு இரண்டு டோஸ் கிடைத்ததும், போகலாம் என்ற உத்திரவும் வந்தது.