8. மெட்ரோ நிலையம்.
உயர்ந்த பல்கலைக்கழகத்தைக் கண்ட பின் நாங்கள் கண்டது என்ன? பாதாள இரயில்வே. இதற்குப் பெயர் மெட்ரோ. இதைப்பார்க்கத் தவறக் கூடாது என்று சொல்லியனப்பினார்கள் நண்பர்கள். ஆகவே அதைக் காண விரும்பினோம். லெனின் குன்றிலிருந்து காரில் சென்று ஓர் இரயில்வே நிலையத்தை அடைந்தோம். கார் ஒட்டிக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்ப முயன்றார் மொழிபெயர்ப்பாளர். 'இது உங்கள் அலுவலகக் கார் இல்லையா? வாடகைக் காரா?’ என்று கேட்டோம்.
'ஆம்' என்பது பதில்.
'வெளியே மீட்டர் இல்லை; ஆகவே சொந்தக் கார் என்றல்லவா நினைத்துவிட்டோம்' என்று வியந்தோம்.
"இதோ பாருங்கள் மீட்டரை' என்று காட்டினார். உள்ளே கார் ஒட்டிக்குப் பக்கத்தில் வாடகை மீட்டர் இருந்தது ; அதில் காட்டிய பணத்தைக் கொடுத்தார்.
'மீட்டர் உள்ளே இருந்தால் வாடகைக் கார்
என்று தெரிந்துகொள்வதெப்படி?'-இந்த ஐயம் எங்களுக்கு எழுந்தது.