பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் கண்ட பெரியோர்கள்


பெரியோர்கள் யார்?

இன்று பெரியோர்கள் என்று சொன்னால், வயது முதிர்ந்தவர்கள், பெரும் பணக்காரர்கள், பெரும் பதவியிலிருப்பவர்கள் என்ற அளவோடு அச்சொல்லின் பொருள் முடிந்துவிடுகிறது. இந்தப் பொருளில் இந்தச் சொல்லை நான் இங்குப் பயன்படுத்தவில்லை. ‘செயற்கு அரிய செய்வார் பெரியர்’ என்றுதான் பெரியோர்களுக்கு இலக்கணம் வகுக்கிறான், வள்ளுவன். செயற்கரிய செயல் என்றால் என்ன? நூறு கிலோகிராம் கனத்தை நம்மால் தூக்க முடியாது. அதனை ஒருவர் தூக்கினார் என்றால், நம் போன்றவர்களுக்குச் செயற்கரிய செயல்தானே அது? ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் முதற் பரிசு பெற்றவர், ஏனையோர் செய்தற்கு அரிய செயலைச் செய்தார் என்பதில் ஐயமில்லை. அப்படியானால், பளுத் துக்கினவரையும் ஒட்டப் பந்தயத்தில் முதலில் வந்தவரையும் செயற்கரிய செய்தவர்கள் என்று கூறலாமா? இல்லை. தமிழர்கள் இவ்வாறு நினைத்ததில்லை. உடற் பயிற்சியின் மூலமும் உடல் வளர்ச்சியின் மூலமும் எவ்வளவு அரிய காரியத்தைச் செய்தாலும், அதனை நம் முன்னோர் செயற்கரியது என்று சொல்வதில்லை. அப்படியானால் செயற்கரிய என்ற சொல்லின் பொருள் என்ன? ‘கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்