பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 159


கூடி எடுத்த ஒரு மனதான முடிவு அறுவை சிகிச்சை, உன் உத்தரவு இல்லாமல் அதைச் செய்து கொள்ளமாட்டேன் என்கிறார்’ என்றேன். ‘டேய், ஏழு முட்டாள் கூடினால் ஓர் அறிவாளியாய் விடுவானா? அவனுக்கு நான் தந்திருக்கும் நோய் ‘Lymphoma’ என்னும் வியாதி. வேணுமென்றால் Cancer பார்க்கும் டாக்டரை அழைத்துப் பார்க்கச் சொல்லு’ என்றாள் அன்னை. இதனைச் சண்முகத்திடம் நான் சொல்ல, மறுநாள் புற்றுநோய் டாக்டரை அழைத்துப் பார்த்தார்கள். இது Lymphoma நோய்தான் என்று அவர் கூறிவிட்டு ஏதேதோ மருந்து கொடுத்தார்.

நாட்கள் ஓடின. குருதேவரின் உடல்நிலை சரிந்து கொண்டேயிருந்தது. புற்று நோயாதலின் அடையாறில் உள்ள புற்று நோய் மருத்துவமனையில் காட்டலாம் என்று நினைத்து, குருதேவரைச் சென்னைக்கு அழைத்து வந்தனர் அவர் உறவினர். குருதேவரின் பழைய நண்பர்களாகிய சி.கே.துரைவேலன், எம்.பி.சண்முகசுந்தரம், நான் ஆகிய மூவரும் ஏற்கனவே கோமா நிலையை அடைந்துவிட்ட குருதேவரைக் கொண்டுசென்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டோம். நோயாளி கோமா நிலையில் ஒரு ஸ்டிரெச்சரில் கிடக்கிறார். அவரைச் சோதித்த டாக்டர் ‘இன்னும் சில மணி நேரம்கூட இருக்காது. இவரைச் சேர்த்து நாங்கள் கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. நீங்கள் திரும்பி அழைத்துக்கொண்டு போய்விடலாம்’ என்றார். நண்பருடன் அமர்ந்திருந்த நான் என்னை மறந்த நிலையில் ‘டாக்டர் தயவுசெய்து இவரை மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளுங்கள். சரியாக ஒரு மாதத்தில் இங்கிருந்து நடத்தியே அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறிவிட்டேன். படு கோபம் அடைந்துவிட்டார் டாக்டர். நல்லவேளையாக அந்த மருத்துவமனையின் தலைவராகிய டாக்டர் சாந்தா அம்மையார் அங்கே வந்தார். நடந்ததையெல்லாம் கூறிய