பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206 ♦ நான் கண்ட பெரியவர்கள்



எண்பது வயதைக் கடந்தாலும் என்னுடைய குரல்வளத்தைக் கண்டு வியப்படைந்து ‘எப்படி உனக்கு இந்தக் குரலிருக்கிறது’ என்று என்னிடம் கேட்பவர்கள் பலருண்டு. இதற்காக நான் ஏதோ தனிப்பட்ட முறையில் மருத்துவம் செய்துகொள்கிறேனோ என்றும், குரலை நெறிப்படுத்தும் (Voice Culture) முறை கையாள்கிறேனோ என்றும் பலர் என்னிடம் கேட்டதுண்டு. எவ்விதக் கட்டுப் பாடுமில்லாமல் கண்டதையெல்லாம் உண்டு வாழும் எனக்கு, இந்தக் குரல் இன்னும் இருக்கின்றதென்றால் அது என்னுடையதன்று. அரசங்குடி சரவண முதலியாருக்கு 1916இல் மகனாகப் பிறந்து நான் பெற்றிருந்த குரல் யாழ்ப்பாணத்தில் 1955இல் இழக்கப்பட்டது. அந்தச் சித்த புருஷரைச் சந்தித்த பிறகு இன்றுவரை நான் பேசும் குரல் அப்பெருமகனார் இட்ட பிச்சையாகும். எனவே, இதில் ஆச்சரியப்படுவதற்கோ, பெருமை அடைவதற்கோ ஒன்றுமில்லை. இத்தகைய மகான்களின் திருவருள் எத்தகையவர் களையும் காக்கும் திறன் உடையது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மேலே கூறிய மூன்று நிகழ்ச்சிகளும் என்னோடு நேரடித் தொடர்புடையவை. இனி கூறப்போகும் நிகழ்ச்சிக்கும் எனக்கும் நேரடித் தொடர்பில்லை. சுவாமிகளிடம் மாபெரும் பக்தி பூண்டிருந்த யாழ்ப்பாண நண்பரொருவர் அவருடைய வாழ்க்கையில் நடந்ததைக் கூறினார். அதைப் பிறரிடம் சொல்லும் பழக்கம் அவரிடமில்லை. ஆனால் என் அனுபவங்களை அறிந்த பிறகு அவருடைய அனுபவத்தை என்னிடம் சொல்வதில் தவறில்லை என்று கருதிக்கூறினார். இப்போது பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அந்த நண்பரும் இல்லை. சுவாமிகளும் இல்லை. எனவே நண்பர் கூறியதை அப்படியே தருகின்றேன். “அ.ச.ஐயா! சுவாமிகளின் மாபெரும் ஆற்றலுக்கு ஓர் உதாரணம் சொல்லப் போகிறேன். மனசுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பிறரிடம் இதுபற்றிப்