பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222 ♦ நான் கண்ட பெரியவர்கள்


இஸ்லாமியர் பாதுகை என்ற தலைப்பில் பாடுவதா? எனக் கோபத்தோடு கேட்டார். சா.க. சிரித்துக்கொண்டே பக்கத்திலிருந்த என்னைக் கைகாட்டி “இவன்தான் ஏற்பாடு செய்தான். அற்புதமாகக் கவிதை இயற்றுவார் என்று கூறினான். நம்முடைய மேடையில் எல்லாச் சமயத்தினருக்கும் இடமுண்டு. ஆதலால் இவருக்கும் இடந்தந்துள்ளேன்” என்றார்.

கவியரங்கம் தொடங்கிற்று. ரகுமான் எழுந்தார், “இங்குள்ள பலருக்கு, அப்துல் ரகுமானுக்கும் இராமாயணத்திற்கும் என்ன தொடர்பு? இவன் ஏன் இங்கு நிற்கின்றான் என்ற ஐயம் மனத்தில் உண்டு. ஒன்று சொல்லட்டுமா! உங்கள் இராமாயணமே, ரகு, மான் பின் சென்ற கதைதானே ஐயா! ரகு, மானின் பின்சென்ற கதையைப் பாட, ரகுமானுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்குண்டு” என்றார். கர ஒலி வானைப் பிளந்தது.

அடுத்தபடியாகப் பாதுகைபற்றி மிகப் புதிய கருத்துக்களைப் பாடி முடித்தார் அப்துல் ரகுமான். இங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கவியரங்கத்தில் இவரைப் போட்டதற்காகச் சினங்கொண்டிருந்த அந்த வைணவர் வெகு வேகமாக எழுந்துவந்து, ரகுமானைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். “ஐயா நீர்தான் உண்மையான வைஷ்ணவர். பாதுகா சகஸ்ரத்தில்கூடச் சொல்லப்படாத புதிய கருத்துக்களைப் பாடியுள்ளீர்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார். கவிக்கோ அப்துல் ரகுமான் கம்பன் மேடையில் அறிமுகமான முறை இதுதான். பாதுகா சகஸ்ரத்தில் சொல்லாத கருத்துக்களைக்கூட ரகுமான் பாடியதால் அன்றே அவர் கவிக்கோ ஆனார்.

பா. ஜீவானந்தம்: பொதுஉடைமைவாதி. ஆயினும் மிகச்சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர்,