பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நான் காணும் இளையர் ♦ 229


விளங்குவதைக் காண்கிறேன். அவர்களுள் சிலரை இங்கே குறிப்பிடுகிறேன்.

கல்லூரியில் வணிகத் துறையில் பேராசிரியர் பதவி வகிக்கும் இவர் பொற்கிழிக் கவிஞர் என்ற சிறந்த விருது பெற்றவர். அன்னை மீனாட்சியிடம் மிக ஆழமான, அழுத்தமான பக்தி கொண்ட இவர் சைவ சமய இலக்கியங்களில் துளையமாடி, மிகச் சிறந்த தம் பேச்சாற்றலால் கேட்பவரை ஈர்க்கும் இயல்புடையவர். இவர்தான் பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் அவர்கள்.

அரசின் தலைமை செயலராக இருந்துகொண்டே பலரும் நெருங்காத திருமந்திரம் என்ற நூலில் புகுந்து ஆழ்ந்த புலமையும், ஓரளவு அனுபவமும் பெற்ற இவர் திருமந்திரம் பற்றிப் பேசியும், நூல்கள் எழுதியும் வருகிறார். இவரே டி.வி. வெங்கட்ராமன் அவர்கள்.

தென்னக இரயில்வேயின் பொதுமேலாளராகப் பணி புரிந்து ஓய்வுபெற்ற ஒருவர் சங்கப் பாடல்களில் துளையமாடி பதிற்றுப் பத்துப்போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தொல்காப்பியத்தில் நல்ல புலமை பெற்றிருப்பதோடு முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலம், தமிழ் என்பவைபோக வடமொழியிலும் பெரும் புலமைபடைத்த இவர் வேத விற்பன்னரும் ஆவார். அவரே ஏ.வி.சுப்பிரமணியம் அவர்கள்.

மிக இளம் வயதிலேயே இந்திய ஆட்சிப்பணியில் பெரும் பதவி வகிக்கும் ஒருவர் தமிழ் இலக்கியங்கள், மேனாட்டு இலக்கியங்கள் என்பவற்றோடு புத்த சமய இலக்கியங்களையும் நன்கு பயின்றுள்ளார். பல்துறைகளிலும் செல்லும் இவருடைய அறிவாற்றலை இவர் அன்றாடம் வானொலி, தொலைக்காட்சிகளிற் பேசும் பேச்சுக்களின் மூலமும் செய்யும் சொற்பொழிவுகளின் மூலமும்,