பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240 ♦ நான் கண்ட பெரியவர்கள்


வெளிப்படுத்துகின்றவர்கள் ஒருவகையினர். இப்படிப்பட்டவர்களிடம் அகமனத்திலிருந்து கலை வெளிப் பட்டாலும் புறமனம் விழித்துக்கொண்டேயிருக்கும். எதிரே வருபவர்களைப் புரிந்துகொள்ளவும், தெரிந்தவர்கள் வந்தால் சைகை மூலம் வரவேற்கவும் இவர்களால் முடியும். இவர்களும் சிறந்த கலைஞர்கள்தான்.

இரண்டாவது வகையினர் இவர்களினும் பெரிய அளவில் வேறுபட்டவர்கள். கலையைத் தொடங்குகின்ற வரையில் அகமனம் புறமனம் பொறிபுலன்கள் அனைத்தும் விழித்துக்கொண்டிருக்கும். தொடங்கிய சில நிமிடங்களில் பொறிபுலன்கள் அடங்கி, புறமனமும் அடங்கி அகமணம் ஒன்றுமட்டுமே பணிபுரியும். இவர்கள் கலையில் ஈடுபட்டிருக்கும்போது எங்கே இருக்கிறோம் என்பதையும், எதிரே உள்ளவர்கள் யார்யார் என்பதையும், தம்மை இரசிக்கிறார்களா இல்லையா என்பதையும்பற்றி அறிவதேயில்லை.

பிள்ளையவர்களின் இந்த வானொலிக் கச்சேரியின் போது இதனை நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.

‘எனக்காகவே வாசிக்க வருகிறேன்’ என்று கூறிய பிள்ளையவர்கள் உதவி இயக்குநர் சங்கரனையும், இயக்குநர் மேனனையும் நன்கு அறிந்திருந்த பிள்ளையவர்கள், மூன்றடி தூரத்தில் எதிரே அமர்ந்திருந்த எங்கள் மூவரையும் காணவும் இல்லை அறிந்து கொள்ளவும் இல்லை. ஆம், எதிரேயுள்ள கலைஞன் திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை அல்லர். அவருடைய அகமனத்தின் ஆழத்தில் தோன்றிய அந்த இசைக்கலை அவரையே மூழ்கடித்துவிட்டது. அவரே அங்கு இல்லாமயால் எதிரே உள்ள எங்களைப் புரிந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ முடியவில்லை.

மேலே கூறிய இருவகைக் கலைஞரில் நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை இராஜரத்தினம்