பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்காத நினைவுகள்-திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை ♦ 239


மென்மையாகச் செய்துகொண்டிருந்தனர். இறைவன் அருளால் நிலைய இயக்குநர் மனத்தில் கூடவே இதனை ஒலிப்பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று. அதற்குரிய ஏற்பாட்டையும் உடனடியாகச் செய்தோம். கச்சேரி தொடங்கவேண்டிய நேரத்தில் வாலாயமாகச் சொல்லப்படும் உரை இப்பொழுது கையாளப்படவில்லை. காரணம் பிள்ளையவர்கள் ஒன்றரை மணிநேரம் முன்னர்த் தொடங்கி வாசித்துக்கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் அவர் என்ன இராகம் வாசிக்கிறார் என்பதை டாக்டர் மேனன் கூற, நானே அறிவிப்பாளனாக, நீண்ட காலத்திற்குப் பிறகு நாதஸ்வரச் சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளையவர்கள் வானொலிக்கு வந்து இப்பொழுது இன்ன இராகம் வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று அறிவிப்புச் செய்தேன். பத்து மணிவரையில் பிள்ளையவர்களின் அமுத கானம் பொழிந்துகொண்டேயிருந்தது. ஆம், அது தேவகானம்தான். இதன்பிறகு பிள்ளையவர்கள் நாதஸ்வரத்தைத் தொடவேயில்லை. சில நாட்களில் அவர் இறைவன் திருவடியை அடைந்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு. டாக்டர் மேனன் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்திற்கேற்ப மிகப் பெரிய ஒலி நாடாக்களில் பிள்ளையவர்களின் நாதஸ்வர இசையைப் பிடித்துவைக்க முடிந்தது. இருபது ஒலி நாடாக்களில் பிடித்ததாக என்னுடைய நினைவு. டாக்டர் மேனன் என்ன நினைத்தாரோ, தெரியவில்லை. இந்த இருபது டேப்புகளையும் ஒன்றாகக் கட்டி ஒலிக்களஞ்சியத்தில் சேர்க்க வேண்டியது என்று எழுதி வைத்துவிட்டார். அதன் பயனைத்தான் இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

கலைஞர்கள் இருவகைப்படுவர். தம்மை எப்போதும் இழந்துவிடாமல், அதே நேரத்தில் தம்முடைய கலையை