பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 ♦ நான் கண்ட பெரியவர்கள்


சுவாமிகள் சாப்பிட்டு முடிந்ததும், சுவாமிகள் இலையைச் சுருட்ட, தந்தையாரும் தாயாரும் தாங்களே அப்பணியைச் செய்யவேண்டும் என்று சொல்ல, ஒரு விவாதத்திற்குப் பிறகு, இலையெடுக்கும் பணியை என் தாயாரிடம் விட்டுவிட்டார் சுவாமிகள்.

எளிதில் யாருக்கும் தலை வணங்காத என் தந்தையார் சுவாமிகள், எங்கள்வீட்டை விட்டுப் புறப்பட்ட பிறகு, “அவர் ஒரு சித்த புருஷர்” என்று எடுத்துச் சொல்லி, “அவருடைய அருளாசி நம்முடைய வாழ்வை உய்விக்கும்” என்றெல்லாம் கூறினார். அந்த நேரத்தில் அவர் கூறியதைப் புரிந்துகொள்ளும் ஆற்றலோ தகுதியோ என்பாலில்லை. அறிந்து தொட்டாலும் அறியாமற் தொட்டாலும் மின் கம்பியின் ஆற்றல் நம் உடம்பினுள் பாய்வதைப் போல, திருப்பதி ஐயா போன்ற மகான்களின் அருளாசி எனக்குக் கிடைத்தமையால்தான் இன்று இந்த நிலையில் உள்ளேன். பிற்காலத்தில் “உருவுகண்டு எள்ளாமை வேண்டும்” (குறள்: 667) என்ற குறளைப் படிக்கும்பொழுதெல்லாம் நாலடி உயரமும் அப்பாவித் தோற்றமுமுடைய இந்தச் சித்த புருஷரின் வடிவம்தான் என் கண்முன் தோன்றும்.

அந்த மகானுடைய சமாதி திருச்சி மாவட்டம் குளித்தலையை அடுத்த கடம்பர் கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது. இன்று பலரும் அக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர், எதிர்பாராத விதமாகக் குளித்தலை செல்லவும், சுவாமிகள் சமாதியைத் தரிசனம் செய்யவும் எனக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது. அதுவும் அந்த மகானுடைய அருளாசிதான் என்பதை உணர்கிறேன்.