பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60 ♦ நான் கண்ட பெரியவர்கள்


ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.

இந்த மாமனிதர் மாணவர்கள்பால் கொண்ட பரிவிற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு கீழே தரப்பெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றும் மாணவர் பலருண்டு என்ற செய்தி எப்படியோ அரசின் காதுகளுக்கு எட்டிவிட்டது. கடலூரிலிருந்த வெள்ளைக்காரத் தலைமைப் போலீஸ் அதிகாரி, மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகளைத் தாம் சோதனையிட வருவதாகத் துணைவேந்தருக்குத் தகவல் தெரிவிப்பார். உடனே துணைவேந்தர் தம்முடைய காரை அனுப்பி எங்கள் பத்துப் பதினைந்து பேருடைய அறைகளிலுள்ள கம்யூனிசம் பற்றிய புத்தகங்களை யெல்லாம் வாரிக்கொண்டுபோய்த் தம்முடைய பங்களாவில் வைத்து விடுவார். காவலர்கள் வருவார்கள்; அறைகள் சோதனை இடப்படும்; ‘ஒன்றுமில்லை’ என்று போய்விடுவார்கள். இதிலொரு வேடிக்கை என்னவென்றால், காவலர்கள் சோதனையிட வரவேண்டுமென்றால் துணைவேந்தர் உத்தரவில்லாமல் அண்ணாமலை நகர் எல்லைக்குள் நுழைய முடியாது.

தாங்கள் முன்னறிவிப்புச் செய்வதால்தான் ஏதோ நடந்துவிடுகிறது என்று சந்தேகப்பட்ட போலீஸ் தலைமையதிகாரியாகிய ஆங்கிலேயன் ஒரு யுக்தி செய்தான். அவன் பெயர் கானிங்ஹாம் என்பதாகும். ஒரு நாள் மாலை ஐந்து மணியளவில் பல போலீஸ்காரர்களை அழைத்துக்கொண்டு துணைவேந்தரின் அனுமதியில்லாமல், நேரிடையாக மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்துவிட்டான். விவேகானந்தன், சுப்பராயன் என்பவர்களுடைய அறைக்குள் இருந்த கம்யுனிசம் சம்பந்தமான பல புத்தகங்ளை