பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சா.கணேசன் ♦ 79


பாஸ்கரத் தொண்டைமான், கிறிஸ்தவராகிய கவிஞர் மரியதாஸ், இஸ்லாமியராகிய கா. நைனார் முகமது, கவிஞர் அப்துல் ரகுமான், நீதிபதி மு.மு.இஸ்மாயீல் ஆகிய அனைவரும் ஒரே மேடையில் தோன்றிக் கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் வாய்ப்புக் கிட்டியது. ஆண்டுதோறும் இந்த ஏற்பாட்டைச் செய்தவர் சா.க. அவர்கள்.

ஆண்டுதோறும் பிறருடைய இடத்தில் கொட்டகை போட்டுக் கம்பனுக்கு விழா எடுத்து, விழா முடிந்ததும் அக்கொட்டகையைப் பிரிக்கும் சூழல் இருந்துவந்தது. கம்பனுக்கென்று தனியே ஓர் இடம் வாங்கி, அவனுக்கென்று ஒரு மணி மண்டபம் எழுப்ப வேண்டுமென்று கனவு கண்ட சா. க., அதனையும் செய்து முடித்தார்.

அதன்பிறகு கோவை முதல் சென்னை ஈறாக ஏறத்தாழ ஐம்பது ஊர்களில் கம்பன் கழகங்கள் தோன்றின.

சா.க. அவர்கள் தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில் மற்றுமோர் கனவு கண்டார். கம்ப இராமாயணத்திற்கு ஒரு திருந்திய நல்ல பதிப்புக் கொண்டு வரவேண்டும் என்பதே அக்கனவாகும். அன்றைய நிலையில் ஒரு இலட்சத்திற்கும் மேல் முன்பணம் போட்டு இதனைச் செய்யும் நிலையில் யாருமில்லை. இந்த நிலையில் இராமனுடைய அருள் அமரர் கி.மு. அழகர்சாமி அவர்கள் மூலம் செயற்படத் தொடங்கியது. அமரர் கி.மு. அழகர்சாமி தமிழகச் சட்டப்பேரவையின் செயலாளராக இருந்துவந்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் தாம் ஒருவராகவே முன்னின்று, முன்பணமும் இட்டு இந்நூலை வெளிக்கொணர முனைந்தார். பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ. அவர்கள் தலைமையில் முனைவர் தெ.ஞானசுந்தரமும் நானும் பதிப்புப் பணியை மேற்கொண்டோம்.