பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

“தேசீயக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப் போனால் அந்தந்தப் பகுதியிலிருந்து கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களை கொண்டு கூடுமான வரையில் அபிவிருத்தி காணுவதே திட்டத்தின் பலன் தரக்கூடிய நோக்கமாக இருக்கவேண்டும்.“

“தேசீய திட்டக் குழுவினர் இந்த முறையில் விஞ்ஞான ரீதியில் தொழில்களைப் பரவலாகத் திட்டமிட்டு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்திப் பொருள்களை உண்டாக்கக்கூடிய தொழில்களை ஒழுங்கான முறையில் நடத்திச்செல்லவேண்டும். எந்த பகுதியிலும் கிடைக்கக்கூடிய வளங்கள் அபிவிருத்தியடையாத நிலை ஏற்படக்கூடாது.“

“இதன் மூலகாக வசதிகள் கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூரில் உள்ள தொழிலாளர்களுக்கும் தேவையான வேலை வாய்ப்புத்தேடித்தரமுடியும். உள்நாட்டு வளர்ச்சிக்குத் தேவைப்படும் பணிகளுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர் வர்க்கம் முதல் உரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர்.

உள்நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்கள், உள் நாட்டுத் தேவைகள், உள்நாட்டு வாய்ப்புகள் ஆகியவைகளைக் கூர்ந்து கவனித்துப் பார்த்து தக்கமுறையில் துரிதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் நிர்வாக இயந்திரம் உருப்படியான வகையில் செயல்படுமானால் எந்த மாநிலம் அல்லது ராஜ்யம் அல்லது பிராந்தியம் பற்றாக்குறையானது என்றும் எந்த மாநிலம் மிதமிஞ்சியது என்றும் நிர்வாக அதிகாரிகள் திட்ட வட்டமாக நிர்ணயிக்க ஏதுவாக இருக்கும்“

“அப்படி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் பொதுநிதியிலிருந்து பற்றாக்குறைப் பகுதிகளைச் சரிசெய்ய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். அல்லது மிதமிஞ்சிய பகுதிகளில் இருந்து கிடைக்கக்கூடிய இலாபத்தை ஒவ்வொரு துறையிலும் பொதுவான நன்மையை உத்தேசித்து பயன்படுத்தப்பட வேண்டும்.“