பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கைத்தறி ஆடைகள் மாநில சர்க்காரே பெருமளவில் வாங்கி அவைகளை ஏற்றுமதி செய்யவேண்டும்.

தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக்கொள்கின்ற தன்மையில் ஏற்றுமதியானது தனிப்பட்டவர்கள் வசம் ஒப்படைக்கக்கூடாது.

ஒரு பயனுள்ள காரியத்திற்குப் பல இலட்சக்கணக்கானவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்ற முறையில் கைத்தறித் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் காவலனாக சர்க்கார் இருக்கவேண்டும்,

கூட்டுறவு ஸ்தாபனங்கள் அமைத்தல், அவர்களுக்குத் தேவையான குடியிருப்பு வசதிகளைத் தேடித்தருதல் இன்னும் இதுபோன்ற வேலைகள் அணைத்தும் மேற்கொள்ளுவதானது சர்க்காரின் வள்ளல் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமையும். தற்போது தேவைப்படக்கூடியது என்னவென்றால், கைத்தறித் தொழில் நிலையானதாகவும், இலாபம்தரத் தக்கனவாகவும் அமையவேண்டும் என்பதேயாகும்.

உப்பு, இரசாயண உப்பு இன்னும் இதுபோன்ற வகையராக்களின் ஏற்றுமதிச் சூழ்நிலைகள் அனைத்தும் எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கிறது. தூத்துக்குடி மட்டுமன்றி வேதாரண்யம், சூனாம்பேடு இன்னும் இதுபோன்ற எண்ணற்ற இடங்கள் இத்தொழில் நல்ல முறையில் வளருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகுந்து காணப்படுகிறது இத்தொழிலுக்கு மக்கள் சக்தி அதிகம் தேவைப்படக்கூடிய நிலையில் இருக்கிறது.

எனவே சர்க்கார் பொதுத்துறையில் உப்பு உற்பத்திக்கான விளை நிலங்களை அதிகம் கொண்டுவருவதற்குப் போதுமான வாய்ப்பு இருக்கிறது.

பல்வேறு விதமான எண்ணெய் வகையராக்கள், காய்கரி வகைகள், தாவரப் பொருள்கள் ஆகியவைகள் உற்பத்தி செய்யவேண்டும். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் அதிகமான உற்பத்தியைப் பெருக்கவேண்டும்.

தற்போது தனிப்பட்டோர் ஆதிக்கத்திலிருக்கும் பீடி தொழில்களை பொதுத்துறையின்கீழ் கொண்டுவரவேண்டும்.

உதகமண்டலத்தில் கச்சா பிலிம் தயாரிக்கும் திட்டம் மக்கள் -மக்களிடத்தே நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இன்னும் அது நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.