பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அன்னார்கள் தங்களைப் பொறுத்தமட்டில் அபாயத்தை விளைக்கக்கூடியதும், உன்னத உணர்ச்சியுடன் ஊன்றி நோக்குங்கால், மகோன்னதமான ஒரு தனிச்செந்நெறியாய்த் திகழ்கின்றதுமான இப்பாதையின் வழிச் செல்கின்றார்கள். அத்தகையோரின் உயர்ந்த லட்சியமும், தியாகமும் ஈன்றெடுத்த தற்பெருமையைத் தவறாக “அகங்காரம்” என்று திரித்துக் கூறலாமா? “அகங்காரம்” என்கிற அக்கிரமான வார்த்தையை அவர்கள் நேர்க்குப் பிரயோகிக்க எவன்தான் துணிவு கொள்வான் ? அவ்விதம் எவனேனும் கூறுவானாயின், ஒன்றில் அவன் முட்டாளாக இருக்கவேண்டும். இல்லையாயின் போக்கிரியாக இருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்வேன். அந்தத் தியாக சொரூபிகளான புருஷோத்தமர்களின் மன ஆழம், உத்வேகம், எழுச்சி, “உள்ளங் கவர்ந்தெழுந்து ஓங்கும்” உணர்ச்சிகள் ஆகியவற்றை உண்மையாக உணர்ந்து கொள்ள அவன் சக்தியற்றவனானதால், நாம் அவனை மன்னித்துவிடுவோம். அவனுடைய இருதயம் கேவலம் மாமிசப் பிண்டத்தைப் போல் மரத்து உணர்ச்சியற்றுக் கிடக்கிறது. அவனுடைய கண்கள் பார்வைக்குறைவாயிருக்கின்றன. இன்னும் வேறுபல கேடுகளும் அவனுடைய இருதயத்தையும் கண்களையும் மறைத்துக்கொண்டே வந்திருக்கின்றன. தன்னம்பிக்கை (தற்காப்பு) என்பதை “அகங்காரம்” என்றே எப்போதும் வியாக்கியானம் செய்யும் நிலைமை ஏற்பட்டு வந்திருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. ஆனால் வேறு வழியில்லை.

புரட்சிக்காரனின் இரு குணங்கள்

இன்று அனுஷ்டானத்திலிருக்கும் சம்பிரதாயத்தை—நம்பிக்கையை—மதத்தை நீங்கள் விரோதித்துப் பாருங்கள். குற்றங் குறைகளற்றவரென்றும், பூரணமானவரென்றும் தீர்மானித்து, குணாகுணங்களைப் பரிசீலனை செய்வதற்கு அப்பாற்பட்டவரெனப் பொதுவாக நம்பப்படுகிற, ஒரு வீரனையோ, மகாத்மாவையோ, தேவ தூதனையோ, அவதார புருஷனையோ கூறிப்பாருங்கள். உங்களுடைய தர்க்க வன்மை, பொது மக்கள் உங்களை வீண் கர்வம் பிடித்தவர்களென்று பழித்து இழித்துக் கூறும்படியான