பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

தங்களுடைய விசேஷச் சலுகையும் அந்தஸ்தும் கடவுளாலேயே அனுமதிக்கப்பட்டதென்றும் அவர்கள் உரிமை பாராட்ட ஆரம்பித்தார்களென்றும் அபிப்பிராயப்படுகிறார்கள். நான் அவ்வாறு கருதவில்லை. சர்வ மதங்களும், மத நம்பிக்கைகளும். சமயக் கொள்கைகளும் சாதி ஆசாரங்களும் இன்னும் இவை போன்ற ஸ்தாபனங்களும், நாளேற கொடுமையும், கொள்ளையும் ஓருருவாய்த் திரண்ட ஸ்தாபனங்களுக்கும், தனி மனிதருக்கும், வகுப்பாருக்கும் ஒத்து ஊதுகின்ற நிலைமைக்கு வந்து விட்டனவென்ற முக்கிய விஷயத்தில் எனக்கும், அவர்களுக்கும் வித்தியாசமில்லை. ராஜத் துரோகம், அரசனை எதிர்த்துக் குழப்பம் புரிவது—மாபெரும் மகா பாவமென்றே சகல மதங்களும் கூறுகின்றன.

கடவுள் உற்பத்தி ஏன்?

கடவுள் உற்பத்தியைப் பற்றி என்னுடைய அபிப்பிராயம் பின்வருமாறு:— மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வரையறுத்துத் தனக்கேற்படும் விபத்துக்களையும் அவற்றை சமாளிக்க முடியாத தன்னுடைய பலவீனங்களையும் யோசித்துப் பார்த்த காலத்தில்தான், சோதனைக்குரிய சந்தர்ப்பங்களிலெல்லாம் தைரியமாகத் தலைகொடுப்பதற்கு. நிகழும் ஆபத்துக்களை ஆண்மையுடன் தாங்கி நிற்பதற்கும், செல்வம் குன்றி தரித்திரம் மேலிட்ட காலத்தில் மனந்தளராது இருப்பதற்கும் தைரியமூட்டுவான் வேண்டி, மானசீகமாகக் கடவுள் உற்பத்தி செய்யப்பட்டது. அக்கடவுளை, சர்வசக்தி வாய்ந்த தனிச் சட்டங்கள் படைத்தவனென்றும், “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிவு” கொண்ட அம்மையப்பனென்றும் கற்பித்து வெகுவிரிவாகச் சித்திரிக்கப்பட்டது. ஆகையால், மனிதன் கடவுளுடைய குணாதிசயங்கள், கோபதாபங்கள் சட்ட திட்டங்களாகியவற்றைக் குறித்து தர்க்கித்தபொழுது, அவனால் சமுதாயத்திற்குத் தீங்கு நேராதிருக்க, கடவுள் அவனைத் தண்டித்துத் தடுக்க வேண்டியவனாயிருந்தான். கடவுள் மனிதரால் அம்மையப்பனென்று வர்ணிக்கப்பட்டு போற்றிப் புகழப்பட்டபொழுது அவன் அவர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், சகோதரச் சகோதரிகளாகவும், சிநேகிதனாகவும்,