பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 

நான் நாத்திகன்-ஏன் ?

 

 

ஓர் புத்தம் புதிய பிரச்னை கிளம்பி இருக்கிறது. இந்தப் பிரச்னையானது சர்வ வல்லவனும், சர்வவியாபியும், சர்வ தயாபரனும் ஆகிய கடவுள் ஒருவன் உண்டு என்று நான் நம்பாதது அகங்காரமே காரணமாக இருக்குமா? இதுபோன்ற ஒரு பிரச்னையைப்பற்றி எப்போதாவது விவாதிக்க நேரிடுமென்று நான் கனவிலும் கருதியதில்லை. நான் நாத்திகம் பேசுவது அதிகப் பிரசங்கித்தனமென்றும், எனது அவநம்பிக்கைக்குக் காரணம் என்னுடைய ஆணவமும் அகந்தையுமேயென்றும், என்னோடு சில நாட்கள் பழகிய சில நண்பர்கள் அபிப்பிராயப்படுகிறார்களென்று, எனது ஆரூயிர்த் தோழர்கள் மூலமாக அறிந்துகொண்டேன். என்றாலும் இந்த பிரச்னை முக்கியமான பிரச்னை என்பதில் ஆட்சேபணை இல்லை. இதைத் தெள்ளத் தெளியப் பரிசீலனை செய்ய வேண்டியதும் அவசியந்தான். இவ்விதப் பரிசீலனை விஷயத்திலே நானே மகா நிபுணன் என்று என்னைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொள்வதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு சாதாரணமான மனிதனேயொழிய, மனிதத் தன்மைக்கு மேற்பட்ட எவ்வித சக்தியும் உடையவனல்ல. இவ்வுலகில் எவனும் தன்னை மனிதத்தன்மைக்கு மீறினவன் என்று உரிமைக் கொண்டாட முடியவே முடியாது என்பது எனது முடிவு. என்னிடத்தில் சில குறைபாடுகள் இருப்பதை நான் உணர்வேன். எனது இயற்கை சுபாவத்திலே அகங்காரம் என்பதும் ஒரு பாகமாக இருக்கிறது. எனது தோழர்களிடையில் நான் ஒரு எதேச்சாதிகாரி (Autocrat) என்றே அழைக்கப்பட் டேன். எனது ஆருயிர்த்தோழரான பூதகேஸ்வர தத்தரும் (B. K. Dutt) கூட என்னைச் சிற்சில சமயங்களில் அவ்வாறு அழைத்ததுண்டு. சில சந்தர்ப்பங்களில் எனது தோழர்கள் என்னை அடாதுடிக்காரன் சொல்வதற்குகூட நான் ஆளாயிருக்கிறேன்.