பக்கம்:நாயகர் பெருமான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

தம் இதயமே வீரத்தின் இருப்பிடமாகக் கொண்ட உமர் இப்னு சத்தாப் என்பவர் இச் சொற்களைக் கேட்டு எழுச்சி பெற்றார். அவர் அபூஜாஹிலை நோக்கி, “நான் இவ் வேலையை முடித்து வருகிறேன். ஆனால், நீர் சொன்னபடி நடப்பதாகச் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்” என்று கேட்டார். உடனே அபூஜாஹில் அவரைக் கஅபாவிற்கு அழைத்துக் கொண்டு சென்றான். அங்குள்ள ஹூபல் என்னும் உருவச் சிலையின் முன் நின்று தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாகச் சத்தியம் செய்தான். உமர் இப்னுகத்தாப்பும் தம் பகைவரைக் கொல்லும் வரை எவ்விதமான இன்பத்தையும் நினைத்துப் பார்ப்பதில்லை என்று உறுதி பூண்டார்.

இஸ்லாத்தில் சேர்ந்தவர்களைத் துன்புறுத்து வதே தம் இன்பமாகக் கொண்டிருந்த உமர் இவ்வாறு உறுதி பூண்டபின் உருவிய வாளுடன் புறப்பட்டார்.

நபிபெருமானைத் தேடிப் புறப்பட்ட உமரை நண்பர் ஒருவர் வழியில் சந்தித்தார். உருவிய வாளுடன் கருவிய நெஞ்சுடன் உமர் விரைந்து செல்லும் காரணத்தைக் கேட்டறிந்த அந்த நண்பர், உமரைக் கேலி செய்தார்.

உமது குடும்பத்திலேயே இஸ்லாம் புகுந்து விட்டது. உம் சகோதரியும் மைத்துனரும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டார்கள். வெட்கமிருந்தால் முதலில் வீட்டில் உள்ளவர்களைத் தீர்த்துக் கட்டி விட்டுப்