பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் . 177

உபகாரங்களைச் செய்து கொண்டேயிருந்தாலும் செய்த நன்றி அறியாத கீழ் மக்களிடத்திலே அவ்வுதவிகள் சிறப்பு உடையனவாக ஒருபோதும் நினைக்கப்படவே மாட்டா.

‘கீழோர் நன்றியறிதலும் அற்றவர்கள் என்பது கருத்து.

345. பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும், நாய் பிறர்

எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்-அச்சீர், பெருமை உடைத்தாக் கொளினும், கீழ் செய்யும் கருமங்கள் வேறு படும்.

பொற்கலத்திலே நல்ல உணவை இட்டு ஊட்டி ஊட்டி உபசரித்து வளர்த்து வந்தாலும், நாயானது, பிறருண்டு எறிந்த எச்சில் இலைக்கே கண் இமையாது எதிர்பார்த்திருக்கும். அத்தன்மை போலவே, சிறப்புள்ளவனாக ஏற்றுக் கொண்டாலும் கூடக் கீழ்மகன் செய்யும் செயல்கள் எல்லாம் அந்தச் சிறந்த தன்மைக்கு வேறுபட்டனவாகவே என்றும் இருக்கும்.

‘கீழோன் கீழ்மையான செயல்களையே எப்பொழுதும் செய்வான்’ என்பது கருத்து.

346. சக்கரச் செல்வம் பெறினும், விழுமியோர்

எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்;-எக்காலும் முந்திரிமேற் காணி மிகுவதேல், கீழ் தன்னை, இந்திரனா எண்ணி விடும்.

பூமண்டலம் முழுவதையுமே தமக்கு உரிமையாகக் கொண்டாற் போன்ற பெருஞ் செல்வத்தையே பெற்றாலும் சான்றோர்கள், எக்காலத்தினும், வரம்புகடந்த சொற்களைச் சொல்லவே மாட்டார்கள். முந்திரி அளவான தன் சிறு செல்வத்தின்மேல் காணியளவான மற்றொரு சிறுதொகை அதிகமாகச் சேர்ந்து விட்டாலும் கீழ்மகன், தன்னைத் தேவேந்திரனாகவே எண்ணிக் கொண்டு, வரம்பு கடந்து உடனே பேசத் தொடங்கி விடுவான்.

‘கீழோர், தம்மிடத்தே சிறிது செல்வம் உயர்ந்தாலும், அதனாற் செருக்குற்று வரம்புகடந்து பேசத் தொடங்கி விடுவார்கள்’ என்பது கருத்து.

347. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினும், செருப்புத் தன் காற்கே யாம்; எய்திய செல்வத்தர் ஆயினும் கீழ்களைச் செய் தொழிலாற் காணப்படும்.