பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 43

தொடங்குதல், வானளாவிய புகழினை உடைய உயர்குடியிலே பிறந்தவர்களிடத்திலே ஒரு போதும் இல்லையாகும்.

‘உபகாரத்திற்குப் பதில் அபகாரஞ் செய்தானே? என்று சினங்கொள்ளாமல் பொறுத்துக் கொள்வதுடன், மீண்டும் அவனுக்கு உபகாரமே செய்யும் பரந்த மனப்பண்பு உடையவரே உயர்குடிப் பிறந்தார் எனத் தக்கவர் என்பது கருத்து. தீங்கு ஊக்கல்-தீமை செய்யத் தொடங்குதல்.

70. கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும், தம்வாயாற் பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை,-நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற், சொல்பவோ, மேன்மக்கள் தம்வாயான் மீட்டு?

நாயானது நம்மீது கோபித்து நம்மைக் கெளவிக் கொள்ளுதலைக் கண்டும், அதனாற் சினங்கொண்டு மீண்டும் அந்த நாயை நாம் நம் வாயாற் கெளவுதல் இந்த உலகத்திலே இல்லை. அதனால், கீழ்மக்கள், குணம் உடையதல்லாமல் கீழ்த்தரமான பேச்சுக்களையே பேசினாலும், அதனால் சினங்கொண்டு மேன்மக்கள், திரும்பவும் தம் வாயால் அவர்களை அப்பேச்சுக்களால் ஏசுவார்களோ?

‘நாய் கடித்தால் எவரும் அதனைத் திருப்பிக் கடிப்பதில்லை; அது போலவே, கீழோர் பழித்தாலும் அவர்களைச் சான்றோர் திருப்பிப் பழிக்க மாட்டார்கள் என்பது கருத்து. ஏனென்றால், அத்தகைய இழி சொற்களை அவர்கள் வாயாற் சொல்லாத பண்பினர் ஆதலால் என்க.

2. இல்லற இயல்

செல்வம் நிலையாமை முதலாக ஏழு அதிகாரங்கள் துறவறம் பற்றிய உறுதிகளை வற்புறுத்தின. இனி இல்லறத்தாருக்கு உறுதி தரும் செய்திகள். இதுமுதல் ஆறு அதிகாரங்களுள் சொல்லப்படுகின்றன.

இம்மை மறுமையாகிய இரண்டிடத்தும் இன்பந் தருவது இல்லற நெறியாகும். வாழ்க்கைத் துணைவியாகிய கற்புடைய மனையாளோடும் கூடி இருந்து செய்யப்படும் அறவாழ்வு இது. இந்த வாழ்வுதான் உலகிற்குப் பலவகையானும் உயர்வையும் சிறப்பையும் வளத்தையும் வாழ்வையும் தருவதாகும்.