பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

பாராட்டுவர். கோடையிலே இளைப்பாறும் குளிர் மர நிழல் என்று சொல்லும்படிப் பிறர் வாடையிலே அவர்க்கு ஆறுதல் தருபவனே சிறந்த தலைமகன் ஆவான். அது மட்டும் அன்று; பழுத்த மரம் உள்ளூரில் பொது இடத்தில் இருக்கிறது; அதுபலர் பசியைத் தீர்க்கிறது; ருசியை அளிக்கிறது. பலரும் பயன் பெறுகின்றனர். சுற்றத்தினர் வந்து நற்பயன்கள் பெற அவன் கற்றூண்போல் அவர்கள் சார நிற்கின்றான்; சுற்றம் போற்றுதல் நற்செல்வம் உடையவரின் கடமையும் ஆகும்; அஃது அவர்கள் தாளாண்மையை அறிவிக்கும்.

செடிக்குக் காய் சுமை அன்று; காய்கள் அடுக்கடுக்காகக் காய்த்தாலும் மரம் அவற்றைத் தாங்குவதற்குத் தயங்குவது இல்லை; பழுத்துக் காய்த்துப் பயன் தரும் மரங்களே மதிப்புப் பெறுகின்றன. வெடிக்கும் துயரத்தோடு இவன் படிகட்டு ஏறி மாறி மாறி இருந்து விருந்துண்டு செல்லும் சுற்றம் கண்டு உழைப்பாளி துவண்டு போகமாட்டான். வருவிருந்து வைகலும் ஓம்புவதில் அவன் மனம் மாழ்குவது இல்லை. சுமை அவனுக்குச் சுவை மிகை அவனுக்கு உவகை; அவர்கள் வருகை உள்ளத்துக்குத் தரும் மகிழ்கை;

சிரித்துப் பேசிச் சிருங்காரம் விளைவிக்கும் சிற்றினத்தவர் உறவு கனத்துக் காணப்பட்டாலும் அவை நாட்கள் நீடிப்பது இல்லை; வெறுத்து ஒதுங்கிவிடுவர்; மிகுத்துப் பழகி நம் துயர் வருத்த அவற்றைத் தீர்க்கும் தகையாளர் நம் சுற்றத்தினர். அவர் மிகையாளர் எனினும் நம் துயர் தீர்க்கும் மருந்தாளர் ஆவர். நண்பர்கள் நீடித்து இருக்க விரும்புவர்; சுற்றத்தவர் துயர் தீர்க்க