பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

பயன்படும்; பிறர்க்கு அவன் பயன்படுகிறான், பிறருக்காக உழைக்கிறான்; அவர்களும் இவனை நன்கு பயன்படுத்துகின்றனர்; வாழ்க்கை இனியது; சுவை மிக்கது; சாரம் உடையது; அதன் தன்மை அறிந்து நன்மை அடைக; பிறருக்கு நன்மை சேர்க்க.

பயன்பட வாழும் வாழ்க்கை நயன் உடையதாகும்; சாவதிலும் ஒருபெருமை உண்டு; உன்னால் ஆவது செய்து முடிக்கிறாய்; உன்னை நம்பியவரைத் தூக்கிவிடுகிறாய்; ஆல நன்னிழலாக இருந்து பிறர்க்குக் குளிர்ச்சி தருகிறாய்; உடம்பு பழுது ஆகிறது; முழுதும் அது பயன்பட்டபிறகு நீ அழுது அலமரத் தேவை இல்லை; விழுது பல நீ விட்டுச் செல்கிறாய்; அவை மறுபடியும் பிறருக்குச் சுமை தாங்கியாய் நிற்கும்; கரும்பு பிழிந்த சக்கை; அதுதான் உன் பழுதுபட்ட யாக்கை; அதுபற்றி எரியட்டும்; அஃது உன் ஒளியை உலகுக்குக் காட்டும். வெந்து சாம்பல் ஆகட்டும்; அதனை மற்றவர் நெற்றியில் இட்டு உன்னை வழிபடுவர்; வழிபடத் தக்க வாழ்வை வாழ்ந்து காட்டு பழிபடத் தாழ்ந்து அழியாதே.

சாவுக்கு அஞ்சாதே, அஃது இன்றும் வரும் நாளையும் வரும்; என்றாவது வரட்டும்; அதனைப்பற்றி ஏன் கவலைப் படுகிறாய்? ஆனால் ஒன்று அதற்குள் நீ நினைக்கும் நற்செயல்கள் அனைத்தையும் செய்துமுடித்துவிடு; அது உன்னால் செய்ய முடியும்; நீ பெற்ற கல்வி, கற்ற தொழில் திறன், வாய்ப்புகள் பிறர்க்கு வாய்க்கும் என்று கூறமுடியாது; தமிழில் இராமகாதை எழுத ஒரு கம்பனால்தான் முடிந்தது அறநீதியை வள்ளுவன் ஒருவனால்தான் உணர்த்த முடிந்தது; அவர்கள் அன்று உடம்பு வளைந்து ஏடு எடுத்து,எழுத்தாணியை அழுத்திப்