பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

துறவிக்குக் கவலை ஒரு துரும்பு; எதற்கும் அவன் கவலைப்படவே மாட்டான், ஆவது ஆகட்டும், போவது போகட்டும் என்று அவன் நினைக்கிறான்; 'நாளை' அதனை அவன் நம்புவதில்லை; 'நேற்று' அது பழங்கதை; 'இன்று' அவன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்.

கட்டி வைத்த வீடு, கடன்காரன் ஒற்றி வைத்ததற்காகப் பற்றிக் கொண்டான். இளமை இன்பம் செய்தது; ஆனால் அஃது அவனை விட்டு நாள் ஆக ஆக அகன்று செல்கிறது. எழில் மிக்கவன் என்று பொழிலில் சந்தித்த அழகி ஒரு காலத்தில் பேசினாள். வனப்பு மிக்கவள் என்று கனத்த மொழியில் இவனும் சாதித்தான்; இருவரும் அது கற்பனை என்று அறிகின்றனர். ஈட்டி வைத்த புகழ் இவை எல்லாம் மெல்ல மெல்ல அவனை விட்டு நீங்குகின்றன. மறுபடியும் இந்தப் பற்றுகள்! தேவைதானா? துறவு என்ற நிலை அடைந்துவிட்டால் இந்தச் சின்ன சின்ன ஆசைகள் அவனைத் தின்னத் தொடங்குவதில்லை. அவன் வாழ்வு பின்னப்படுவதில்லை.

இன்பம் தேன் துளி; மேலே தேன் கூடு; கீழே பாழும் கிணறு, மரத்தின் விழுதுகள் அவற்றோடு பாம்பின் தொகுதிகள், சொட்டும் தேன் அவன் நாவிற்குச் சுவை தருகிறது; என்றாலும் மனம் திக்குதிக்கு என்று அடித்துக் கொள்கிறது. எல்லாம் இந்தச் சிறு துளிக்குத் தான் அவன் செய்யும் தகிடு தத்தங்கள்; தாள மேளங்கள். எண்ணிப்பார்த்தால் இந்தப் பாசம் என்பதைக் கயிறாகக் கொண்டு தொங்க மாட்டான். கிணற்றில் வீழ்ந்து சாக மாட்டான். இவற்றை விட்டு வெளியேறிச் சுதந்திரப் பாதையில் நடப்பான்.