பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


ஊரே பற்றி எரிகிறது; எரிந்தால் என்ன? ஏரி குளம் உண்டு; அங்குப் பதுங்கிக் குளிர் பெறலாம். காமம் கட்டுக்கு அடங்காது. அஃது எரித்தால் தப்பித்துக் கொள்ள ஏமமே இல்லை.

10. கைக்கு அழகு தருவது ஈகை

(ஈகை)

ஈவதுதான் கை கைக்கு அழகு தருவது கொடைப் பண்பு; வற்றிவிட்ட பிறகு ஊற்றாக வரும் நீர்ப்பெருக்கு; அது பிறர் வேட்கை தீர்க்கும்; தாகம் எடுப்பவர்க்கு அது உதவுவது; நன்கொடை கைப்பொருள் அற்ற நிலையில் பையைத் தேடித் துழவித் தருகிறானே அது தான் பெருமை. உற்றவன் கொடுக்கிறான் என்றால் அது வெறுமை; உலகப் புகழ்மை; அது காட்டாது மெய்ம்மை. கொடையொடு பட்ட குணன் உடையவர்க்குச் சுவர்க்கத்தின் கதவு அடையாது. சுவர்க்க வாசல் புகுமுன் அங்கே உள் நுழைவதற்கு 'விசா' வேண்டும்; அஃது அவன் கொடுத்துச் சிவந்த கைகள்; அவற்றைக் காட்டினாலே அனுமதி அவனுக்கு வெகுமதி.

"வயது உனக்கு என்ன?" "அறுபத்தி ஆறு"; "மூப்பு உன்னை அடைகிறது; நோய்? இன்னும் அதற்குப் பெயர் தரவில்லை; நாளும் புதிய படைப்புகள்; வழி இல்லை துடைப்புகள்; அவை இன்று நடப்புகள்: அடங்கி இரு ஆரவாரம் ஏன்? செயல்களைக் குறைத்துக்கொள்; தூக்கம் இழக்கிறாய்; காரணம் பற்றுகள் உன்னைப் பிய்த்துத் தின்னுகின்றன. மற்று இனிச் செய்வது யாது? பகுத்து உண்க; பல்லுயிர் ஒம்புக; காசு இருக்கும்போது வேசி போல் பற்றிக்கொள்ளாதே. ஆசு நீங்கி அருளுக; மாசு நீங்கி வாழ்க; ஈத்துப் புகழ் பெறுக."