பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

கண்களின் சுழற்சிபோல உழற்சி காட்டும் உழைப்பாளியின் சுறுசுறுப்பும், பரபரப்பும், பொருள் ஈட்டும் நல் முயற்சிகளும் அந்தக் குடும்பத்தை வாழ்விக்கின்றன. முயற்சி திருவினை ஆக்குகிறது; அயர்ச்சி தாழ்வினைத் தருகிறது.

நேற்று மெலிந்து கிடந்தான்; இவன் வலிந்து செயல் செய்ய முற்பட்டான்; சிறு தொழிலாகத் தொடங்கினான்; இன்று பெருந்தொழில் முதலாளி ஆகிவிட்டான். எப்படி? விடா முயற்சிதான்; ஆடிக்கொண்டிருந்த அவன் ஆரம்ப வாழ்வு காழ்ப்பு ஏறிக் கடுமைகளைத் தாங்கிச் செழுமை பெற்றுவிடுகிறது. காற்றுக்கு அசைந்து துவண்ட மெல்லிய தளிர்களைக் கொண்ட செடி கூட நாளடைவில் காழ்த்து வலிவு பெற்றுக் கட்டுத் தறியாகிறது. அது காற்றுக்குத் துவண்டு வெறும் கீற்றாகச் சாய்ந்து விட்டிருந்தால் போற்றத்தக்க இந்தப் பெருமையை அடைந்திருக்க முடியாது. காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்து நிமிர்ந்து நின்று திமிர்ந்து மரமாகி அது வைரம் பாய்ந்து அசைக்க முடியாத நிலைபெற்றுவிட்டது; இஃது உழைப்பாளிக்கு ஒரு ஆசான். அதைப் பார்த்து இவன் விடாப்பிடியாகத் தொடர்ந்து உழைத்தால் முன்னுக்கு வருவான். கட்டுத் தறியில் யானையைக் கட்டி வைக்க முடியும்; இவன் பல பேர் சுற்றத்தினர் நாடி இடம் அளிக்கும் செல்வனாகத் திகழ்வான்.

வலிமைமிக்க புலி பசித்தால் அது பட்டினி கிடக்காது; சிறு தவளை கிடைத்தால் அதைப் பிடித்து அந்நேரத்திற்கு உயிர் வாழ முற்படும். அதுபோலக் கால் தொழிலாக இருந்தாலும் அது மேலான தொழில் என்று அதைத் தொடங்குக. பிறகு மெல்ல மெல்ல முன்னேறலாம்.