பக்கம்:நாவுக்கரசர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணர்களின் சூழ்ச்சி 35

இடையூறுகள் நேரிடினும் மனங் கலங்காது அச்சமின்றி வாழ்தல் வேண்டும் என்று உலக மக்களுக்கு அறிவுறுத்து வாராய், மக்களே, நும்மீது மலையே வந்து வீழ்ந்தாலும் நீங்கள் சிறிதும் கலங்காது நின்ற நிலையில் இருப்பீராக. சிவன் தமரை மதக் களிறும் கொன்றிட வல்லதோ? (கொல்ல வல்லதன்று) எனத் தம் அநுபவ வாயிலாக வந்த உண்மையினை,

மலையே வந்து வீழினும் மனிதர்காள்! நிலையில் கின்று கலங்கப் பெறுதிரேல் தலைவ னாகிய ஈசன் தமர்களைக் கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே.(5.91:5)

என வரும் திருப்பாடலில் காட்டியிருப்பதைக் கண்டு மகிழலாம்.

நாவுக்கரசரை நலியாமல் வணங்கி வந்த பட்டத்து யானையைப் பாகர்கள் மீண்டும் அங்குசத்தால் குத்தி அவர்மீது செலுத்துகின்றனர். அப்பொழுது அந்த யானை பாகர்களைக் கொன்று வீழ்த்தியும், ஏவுவதற்குக் காரண மாக இருந்த சமணர்கள் மீது பாய்ந்து அவர்களில் சிலரை மிதித்து வருத்தியும் நகர மக்கள் யாவருக்கும் தீராத கவலையை உண்டாக்கி விடுகின்றது. அங்கிருந்து ஒடித் தப்பிப் பிழைத்த சமணர்கள், மன்னனை நாடிச் சென்று, வேந்தரே, தருமசேனன் நம் சமயத்திலிருந்து கற்றுக் கொண்ட மந்திர ஆற்றலால் நாம் ஏவிய யானையைக் கொண்டே நம் வலிமையைக் கெட்டொழித்து நுமது புகழுக்கும் இழிவினைத் தேடினான்’ என்று புலம்புகின் றனர். அரசன் சினமுற்று இனி அவனுக்குச் செய்தற் குரிய தண்டனையைச் செப்புமின் என்று கேட்கின்றான். இது கேட்ட சமணர்கள் அவனைக் கல்லொடு சேர்த்துக் கயிற்றினால் பிணித்துக் கடலில் தள்ளுக’ என்று கூறுகின் றனர். அரசனும் அங்ஙனமே ஆணையிடுகின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/78&oldid=634432" இலிருந்து மீள்விக்கப்பட்டது