பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போன்ற என் சிறுகதைகள் கவியின் மோகனமான மனக்கிறக்கத்தின் வேறு வேறு சுழிப்புகளை ஒரே அடிப்படையிற் கூறுபவை.

'இந்தக் கதைகள் எல்லாம் ஒரே அடிப்படையில் உள்ளனவே? என்று என்னுடைய வாசகர்களே பலர் வினாவியிருக்கிறார்கள். மேலே கூறிய கவி மனநிலையை மையமாக வைத்துப் பார்த்தால் இக்கதைகளில் வேறு வேறு நயங்கள் இருப்பது புரியும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

சிவந்த தாமரைப் பூப்பாதங்கள், நளினமான வளை ஒலிக்கும் கரங்கள், கவியின் நளினம், நாட்டியக்காரிகளின் இங்கிதம், பதங்களின் பக்குவம் - இவையே என் கதைகளில் திரும்பத் திரும்ப வருவதாகக் கூறப்படுகிறது. எழுத்துலகில் எனக்கு என்று ஒரு நளினமான தமிழ் நடை, இங்கிதம், கவிதைப் போக்கு இவை நிச்சயமாக உண்டு என்பதையே இது காட்டுகிறது. ஒவ்வொருவருக்கும் இப்படிச் சில முத்திரைகள் இருப்பதை ஆராய்ந்தால் கண்டுபிடிக்க முடியும். இதற்கு உலகின் எந்த எழுத்தாளருமே விதிவிலக்கு இல்லை. 'சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும் வியாபாரக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு வாலிபக் கவியின்- மனநிலையை நுணுக்கமாகச் சித்திரிக்கிறது. கவிகள் இடம் மாறியும் பிறக்கிறார்கள்.தொடர்ந்து கவிகளாகவே இருக்கிறார்களா என்பதை வைத்துத்தான் அவர்களுடைய இடம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பெரிய தொழிலதிபரின் இயந்திர மனப்பான்மையைத் தன் கவி மனப்பான்மையினால் ஒரு சிறுவன் இளகச் செய்துவிடுவதென்பதும் அமைதியாக நடந்தேறும் பெரும் புரட்சிகளில் ஒன்றாக அமைய வேண்டியதுதானே? பதினேழாவது நம்பருக்கு ஒரு பதில், வண்டு என்ற இரு கதைகளும் எப்படிப்பட்ட வாசகரையும் மனத்தைப் பிசைந்து கண்களில் நீர் நெகிழச் செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. காக்கை வலிப்பு, இரவல் ஹீரோ, இரண்டும் சமூக நிலையின் ஏற்றத்தாழ்வுகளை எண்ணிச் சித்திரிக்கப்பட்டவை.

'சிறுகதை என்பது நிமிஷத்தை நித்தியமாக்குவது என்கிறார்கள். சொற்கள் கிடைக்கும் ஏதோ நிமிஷத்தை நித்யமாக்கும் கவியும், ஏதோ ஒரு நிமிஷத்தில் தன் பேரன் வியாபாரியாயில்லாததையும் அங்கீகரித்துக் கொள்ளும் தொழிலதிபரும், ஏதோ ஒரு விநாடியில் மனம் மாறிய அறிவுச் செல்வனும், நன்மைக்காக மனம் மாறி ஒரு விநாடியில் பொய் சொல்லும் தபால்காரரும், நிமிஷ நேர ஹீரோவான தோட்டியும், நிமிஷ நேரக் கிழிசலில் அனைத்தையும் கிழியக் கொடுத்த ஒருவரும், பிறரும் இச் சிறுகதைகளில் விநாடியை நித்தியமாக்குகிறார்கள். இவற்றின் சிறுகதைத் தன்மையை இந்த எல்லையில் மாற்றியறியுமாறு வாசகர்களை வேண்டுகிறேன்.

'இந்தப் பிரதிபிம்பத்தின் கண்ணாடிகளில் சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு பிம்பங்களின் எதிர் விளைவுகளைக் காண்கிறீர்கள். கலை, கதை, கவிதை எல்லாமே ஏதோ ஒரு வகையில் எதிரே தெரிகிற வாழ்க்கையின்