பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘பிரதிபிம்பம்'தான். இந்தத் தொகுதியில் உள்ள சிறுகதைகள் எத்தனையோ பிரதிபிம்பங்களை- சாயைகளை வாசகர்களுக்குக் காட்டலாம். இவை வெறும் கதைகள் மட்டுமில்லை. கதாசிரியனின் மனத்தில் எந்த அடிப்படையில் எந்த வேளையில் இவை முனைந்து நின்று கருக் கொண்டு வளர்ந்து வெளிப்பட்டன என்பதற்கான கருத்தோட்டத்தை வாசகனுக்கு ஒளிக்காத படைப்புக்களாக இவற்றைக் கூர்ந்து கவனிக்கிற வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். எதனோடும் ஒட்டாமல் எவற்றோடும் பட்டுக் கொள்ளாமல் அந்தரத்தில் தொங்குவது போன்ற திரிசங்குக் கற்பனைகளோ, சொப்பனாவஸ்தைச் சித்திரிப்புக்களோதான் மேலே கூறியது போன்ற ஒரு கருத்தோட்டத்தைத் தவிர்க்க முடியும். அப்படிப்பட்ட சொப்பனாவஸ்தைச் சித்திரிப்புக்கள் மரத்துளையோ தவிட்டையோ தின்பது போல் சப்பென்றிருக்கும். அப்படிக் கதைகளை நீங்கள் இதில் எங்கும் காண முடியாது. ஒவ்வொரு கதையும் உங்கள் மனத்தை அலைக்கழிக்கக் கூடியது. இதில் யார் யாருடைய பிரதிபிம்பங்களை நீங்கள் காண்கிறீர்களோ அல்லது காண்பதாக நினைக்கிறீர்களோ அவர்களில் சிலர் உங்கள் மத்தியிலும் இருக்கலாம். ஏனெனில் இந்தக் கதைகள் வாழ்க்கையிலிருந்து விளைந்தவை. வாழ்க்கையோடு போய்க் கலக்கின்றவை. வாழ்க்கையை அடையாளம் காட்டுகின்றவை.

இதை ஞாபகம் வைத்துக் கொண்டு இந்தக் கதைகளை நீங்கள் படித்தால் கதாசிரியனுக்குப் பெரிதும் உதவியவர்களாவீர்கள். அந்த உதவிக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

இந்தக் கதைகள் நான் பல்வேறு சூழ்நிலைகளில் எழுதியவை. சமீபகாலத்து அரசியல் பொருளாதார மாற்றங்களின் சாயல்கள் உள்ள சில கதைகளும், சமூக மாறுதல்களின் சாயல்கள் உள்ள சில கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. பிரியத்துக்கு ஏங்கும் பெண்கள். அதே வகை ஆண்கள், பெருமிதம் நிறைந்த பெளருஷம் நிறைந்த ஆண்கள், புரிந்து கொள்வதற்குச் சற்றே சிக்கலான நவீன காலத்துப் பெண்கள், நளினமான கவிகள், இங்கிதமான இளைஞர்கள், அவர்களின் உணர்வுகள், தாபங்கள், தாகங்கள், எல்லாவற்றையும் இக்கதைகளில் அங்கங்கே நீங்கள் சந்திக்கலாம். இந்திய நாட்டுக் கிராமத்தின் ஒளிநிறைந்த பெருமை தரும் ஒரு பாத்திரத்தைப் பனையூர் என்றொரு பல்கலைக் கழகம்’ என்ற கதையிலும், கிராமத்துக்குப் பெருமை தராத பழமையிலும் சேராத புதுமையிலும் சேராதவர்களை அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர்' - என்ற கதையிலும் காணலாம். ஜமீன்தாரி ஒழிப்பு, ராஜமான்யம் ஒழிப்பு ஆகிய மாறுதல்களுக்குப் பின்பும் காலத்தோடு ஒத்துப் போகத் தெரியாத சமஸ்தானங்களும், சமஸ்தானாதிபதிகளும் அரச குடும்பங்களும் படும் சிரமங்களைச் சித்தரிக்கும் ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது என்ற கதைக்காக நானே ஒரு பழைய சமஸ்தானத்தைச் சுற்றிப் பார்க்க நேர்ந்தது. இந்தக் கதைகள் வெறும் கதைகளில்லை. இவற்றின்