பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————முதல் தொகுதி நடுத்தெருவில் நாற்பது நிமிஷம் * 105

உடைந்து விட்டதனால் உள்ளே இருந்த பாட்டில்களின் நுனிவெளியே தலை நீட்டின. தந்திப் பியூனின் பையிலிருந்து தந்திகளும், தந்தி மணியார்டர் பாரங்களும், ரூபாய் நோட்டுகளும், முழு ரூபாய் நாணயங்களும் சில்லறைகளுமாக நாலா பக்கமும் சிதறி விழுந்திருந்தன.

எதுவும் சிந்தாமலும் சிதறாமலும் சேதமின்றிப் பிழைத்தது போலீஸ் லாரி ஒன்றுதான். லாரியிலிருந்து மடமடவென்று மழையில் நனைந்து கொண்டே போலீஸ்காரர்கள் இறங்குவதைக் கவனித்தேன்.

விநோதமான இந்த விபத்தை மழையில் நனைந்து கொண்டாவது மேலும் பார்க்க வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால் என் ஆசை அந்த பஸ்ஸுக்குத் தெரியாததனாலோ என்னவோ அது வந்துவிட்டது.

‘சரி, எங்கே போய்விடப் போகிறது? நாளைக்குப்பத்திரிகையில் விபத்தைப் பற்றித் தெரிந்து கொண்டால் போயிற்று' என்று நினைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்துவிட்டேன். நாற்பது நிமிஷம் நடுத்தெருவில் மழைக்கு ஒண்டிக் கொண்டு நின்றதே அதிகம். அதற்கு மேலும் நின்றால் என் நேரம் பாழாய்ப் போய்விடுமே என்ற கவலையும் ஒரு புறம். எழுத்தாளனுக்கு நேரம்தான் வியாபார முதல் அதை விரயம் செய்தால் தொழில் என்ன ஆவது?

மறுநாள் பொழுது விடிகிற வரையில் அந்த விபத்து என் மனத்தை விட்டு அகலவே இல்லை. தற்செயலாக நிகழ்ந்த ஒரு சங்கமம் போல, இயற்கையின் முறை தவறிய நாடகம் போலத் தோன்றியது.

ஐந்து பேர்களை அவர்கள் போகும் திசைக்குப் போகவிடாமல், செய்யும் செயலைச் செய்யவிடாமல் நடுத்தெருவில் தடுத்து உருட்டிய அந்த விபத்து வேண்டுமென்றே இயற்கை செய்து முடித்த சதியா? அழகான யுவதி, கம்பீரமான சீமான் ஒருவர், வேகமாகச் சைக்கிள் ஒட்டும் தந்திப் பியூன், நரம்புகள் இழுக்க வண்டி இழுக்கும் கூலி, எங்கோ போய்க் கொண்டிருந்தபோலீஸ் லாரி-ஆட்டோ.மொத்தம் ஐந்து பேர்களை, ஐந்து வழிகளை, ஐந்து லட்சியங்களை, ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் சிதறிப்போகச் செய்த விதியை எப்படித்துாற்றுவது அல்லது பாராட்டுவது?

பொழுது விடிந்தது! பத்திரிகையும் வந்தது! அதில் விபத்தைப் பற்றிய செய்தியும் வந்திருந்தது.

“இயற்கையின் விநோதமான சந்திப்பு!

போலீஸுக்கு உதவிய விபத்து!

ஜெனரல் போஸ்டாபீஸ் அருகே

அதிசயமான சம்பவம்!!!

கதைகளில்கூட நடந்திருக்க முடியாதென்று சொல்லத்தக்க ஒரு அதிசய அற்புதமான சம்பவம் நேற்று காலை பத்தேகால் மணி சுமாருக்கு ஜெனரல் போஸ்டாபீஸ் அருகே நடந்தது. நகர் முழுவதும் அகஸ்மாத்தாக நடந்த இந்தல் அதிசயத்தைப் பற்றியே பேச்சாக இருக்கிறது.