பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



ஒவ்வொரு நாளும் புதிய புதிய சிந்தனைகள், புதிய கற்பனைகள். மனித வாழ்வு இப்படி ஆக வேண்டும், அப்படி மாற வேண்டும், இந்த விதமாக உயர்ந்து ஒவ்வொரு மனிதனும் பூரணத்துவம் பெற வேண்டும். சத்தியப் புகழ் சாத்தியப்பட வேண்டும். எல்லோரும் ஒரு இனம், ஒரு நிறை, ஒரு நிலை என்றாக வேண்டும். என்றெல்லாம் அவன் நினைத்தான். அந்த நினைவுகள் வாழ்க்கைச் சித்திரங்களாக மாறின. அவை படித்தவர் உள்ளத்தைத் தொட்டன. பண்பை விளைத்தன. புரட்சிகரமான புது எழுத்தாளனாக, ஆசிரியனாக அவன் வளர்ச்சியடைந்தான். ஆனால்...!

ஆனால்...! அவன் மனம் அமைதி அடையவில்லை. சலனப்பட்டுக் கொண்டிருந்தது பல படங்கள், பல விதங்களில்... அவன் சொல்லிக் கொண்டான். ‘நான் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், எழுதுகிறேன்; ஆனால் நானாக எதையும் செய்து காட்ட முடியவில்லை. எனக்கு ஆக்கும் சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தும் எதையும் ஆக்கிக் காட்ட முடியவில்லை...’ என்று.

மனதிற்கு ஒவ்வாத தனக்கென்றும் ஏதும் உரிமை இல்லாத உத்தியோகத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற தாகம் அதிகரித்தது. அடிமைத் தொழிலை விட்டான். இயற்கை வாழ்வை ஏற்றுக் குடிசைத் தொழிலைக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டாயிற்று. அடுத்த நாளே அவன் பொதுமக்களில் ஒருவனாக மாறிவிட்டான்.

சாதாரண ஏழைத் தொழிலாளிகள் தாங்களாகச் செய்த தொழில்களில் போதிய வருமானம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர். மூலதனம் இல்லாத குறை, விற்பனைப் போட்டி, செய்த பண்டங்களைத் தேவை அதிகம் உள்ள பட்டணப் பிரதேசங்களுக்குக் கொண்டு போய் விற்க முடியாமை... ஆகிய காரணங்களால் தொழில்கள் வளம் குன்றி நலிந்து கொண்டிருந்தன. கிராமங்கள் பெருமை இழந்து, பொலிவு குன்றி வறண்ட இடங்கள் ஆயின. கிராம வாசிகளை உயிர் பெறச் செய்ய புதிய நிர்மாணம் தேவை. புதிய வழி ஒன்று தேவை என்று அவன் மனம் இடைவிடாமல் கூறிக் கொண்டிருந்தது.இந்த நாட்டின் நமது இந்திய நாட்டின் உயிர் கிராமங்கள். நமது மதத்தின் வேர் கிராமங்கள்.நமது வாழ்வின் நலன் கிராமங்கள்.நமது சமுதாய அமைப்பின் இயற்கைத் தத்துவத்தின் இலக்கணம் கிராமங்கள். நமது இயற்கை, வாழ்வின் பொழிவு, விளக்கம், மாண்பு எல்லாம் கிராமங்களிலே. இந்திய கலாசாரம், இந்திய இரத்த ஒட்டம், இந்திய மனம் கிராமவாசியின் உடலிலே உள்ளத்திலே காணக்கிடப்பவை.

கிராமம் உயிர் பெற்றால் இந்திய வாழ்வு உயிர் பெறும். இதற்கு வழி என்ன என்று இரவு பகலாக அவன் சிந்திப்பான்.

உண்மையும், உறுதியும் படைத்த அவன் உள்ளத்திலே தொழில்களைக் கூட்டுறவு முறையில் வளர்க்கும் யோசனை அபூர்வமாகத் தோன்றியது. தொழிலாளிகளின் தொழில் வாரியாக ஒன்று திரட்டினான். கிராமவாசிகளை ஐக்கியப்படுத்தினான். அறிவுப் போதனையால் ஆயிரம் சாதிகளின் கூண்டுகளிலே அடைப்பட்டுக் கிடந்த மக்களை ஒன்று திரட்டினான். எல்லோரும் ஒன்றை நினைப்போம், ஒன்றையே