பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டுவிட்டு உறையூரிலேயே அவளுடன் இருந்துவிடு. மாமா, தாத்தா எல்லோருக்கும் நடுவில் ஒரு வாரம் இருந்தால் அவள் தேறிவிடுவாள். போ. நீ அப்படிச் செய். அதுதான் இப்போதைக்கு நல்லது” என்று தம் பையனை நோக்கிக் கூறினார் ரகுநாதன். பையன் மணி “சரி” என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்துவிட்டுப் புறப்படத் தயாரானான். “கொஞ்சம் பொறு ரகு. உன் மனைவியின் பிறந்த வீடு உறையூரில்தானே இருக்கிறது? இப்போது உன் பையனை வீட்டுக்குச் சென்று உறையூருக்குத்தானே அழைத்துக்கொண்டு போகச் சொல்கிறாய்? வண்டியிலே அழைத்துக் கொண்டு போக வேண்டாம். இதோ! இங்கே வாசலில் என் கார் நிற்கிறது.டிரைவரிடம் உன் பையனைக் காட்டி, உனது வீடு சென்று அழைத்துக் கொண்டு போய் மணியையும் உன் மனைவியையும் உறையூரில் விட்டுவரச் சொல்கிறேன். சரிதானே?” “உனக்கு மிகுந்த நன்றி நரசு'ரகுநாதனின் குரல்தழுதழுத்தது.நரசிம்மன் மணியை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்கு வெளியே கார் நிற்குமிடம் சென்றார். 米 来 米 米 米 ரகுநாதன் டாக்டரை ஏமாற்றப் பார்த்தார். ஆனால், டாக்டரா விடுகின்றவர்! ரகுநாதனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்குப் பெருமுயற்சி செய்தார் அவர். "புரொபஸர் ஸார், நீங்கள் என்னிடம் மறைக்கப் பார்க்கிறீர்கள். நேற்றைவிட இன்று உங்கள் உடல் நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாறுதல் என்னைச் சிறிது பயங்கொள்ளச் செய்திருக்கிறது. உங்கள் உள்ளத்தை ஏதோ ஒர் புதிய கவலை அரித்து வாட்டத் தொடங்கியிருக்கிறது.” - ரகுநாதன் டாக்டருக்குப் பதிலே சொல்லவில்லை. “செல்வத்துக்கும் செல்வாக்கிற்கும் ஆசை கொள்ளாமல், தொண்டுக்கும் தூய்மையான வாழ்விற்குமே ஜீவனை அர்ப்பணிக்கும் தியாகிகளை இந்தப் பொல்லாத உலகம் வெறும் ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டு, என்றாவது அது ஒடிந்தால் தூக்கி எறிந்து விடுகிறது!” முதல்நாள் நரசிம்மன் கூறிவிட்டுச் சென்றிருந்த இச்சொற்கள், கூரிய ஆணிகளை அடித்ததுபோல் அவருடைய உள்ளத்தில் பதிந்து வேதனையைக் கிளப்பி விட்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் ஏதோ 'ஆத்ம திருப்தி?', 'அது இது’ என்றெல்லாம் கூறி, நரசிம்மனை மடக்கி அனுப்பிவிட்டார்.என்றாலும் வருடத்திற்கு வருடம் உன்னிடத்தில் படித்துப் பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்களிலேயே எத்தனையோ பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். என்று பரீட்சைகளை எழுதிப் பற்பல உயரிய உத்தியோகங்களை அடைந்த வண்ணம் இருக்க, நீ மட்டும் ஏணியைப் போலச் சார்த்தின இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறாயே? இது உண்மைதானே? ஆனால், நரசிம்மன் உன் போன்ற இலட்சியப் பைத்தியங்களை ‘ஏணி? என்று கூறியதில் பிழை என்ன இருக்கிறது? பொருத்தமான உவமைதானே அது? என்று ரகுநாதனுடைய உள்ளம் அவரையே குத்திக் காட்டியது.