பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. ஆறிய தழும்பு

“ஏன் ஸார்! ஏது இந்தத் தழும்பு? ஏதோ பெரிய தீக்காயத்தினாலே ஏற்பட்டது போலிருக்கிறதே?”

வலது கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே முழங்கைக்குச் சற்றே தள்ளியும் மணிக்கட்டுக்கு முன்பாகவும் இருந்த அந்தத் தழும்பு திருஷ்டியில் படவே, டாக்டர் என்னிடம் கேட்டு வைத்தார்.

“ஆமாம்! தீக்காயம்தான் ஸார் பத்து வருஷங்களுக்கு முன் பட்ட காயம். அதன் தழும்புதான் இது.”

நான் சொன்ன பதிலில் தொனித்த சோக உணர்வை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ, எனக்குத் தெரியாது. அவர் காரியத்தை முடித்துக் கொண்டு போய் விட்டார். ஆனால், உள்ளக் காய்ச்சலையும் கிளப்பி விட்டுப் போய் விட்டார்.

மறக்க முடியாத இன்ப நிகழ்ச்சிகளை நினைவூட்டும் சின்னமாக அந்தத் தழும்பு இருந்திருந்தால், நான் கவலைப்பட வேண்டியதில்லை - கவலைப் பட்டிருக்கவும் மாட்டேன்! முழங்கைக்குக் கீழே கையையே வெட்டிக் கொண்டு விட்டால் என்ன? என்று எண்ணுகிற அளவுக்கு அது என்னைப் பித்தனாக்கி விட்டது.

அது மட்டுமல்ல; அனலாகக் கொதிக்கும் இந்தக் காய்ச்சல் என் வாழ்க்கையின் முடிவுரையாக அமைந்து விடுமானால் எவ்வளவோ நன்றாக இருக்குமே என்றுகூட எண்ணச் செய்தது.

ஊர் ஊராக மாற்றிக் கொண்டு நாடோடியாகச் சுற்றி ‘அவளை’ மறக்க முயன்று பார்த்தேன். வேறுபட்ட இடங்களோடும் வேறுபட்ட புது மனிதர்களோடும் மாறி மாறிப் பழகிக் கொண்டே வந்தால் ‘அவளை’ மறந்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் மறக்க முடியாமல் செய்து வந்தது அந்தத் தழும்பு.

கால விருக்ஷத்தில் பத்து ஆண்டு மலர்கள் மலர்ந்து வரிசையாய் வாடி உதிர்ந்து போயின. ஆனால். என்னில் மலர்ந்த அவளைப் பற்றிய நினைவு மலர் நித்தியமாக நிலைத்து விட்டதே! காய்ந்துபோன, கடல் நுரையைப் போன்ற வறட்டு ரொட்டியையும் கோப்பை நிறையப் பாலையும் எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரி நர்ஸ் உள்ளே நுழைந்தாள்.

அவள் வைத்துப்போன பால் கோப்பையைக் கையில் எடுத்து உதட்டுக்குச் சரியாகக் கொண்டு சென்ற பொழுது வலது கையில் வெள்ளை வெளேரென்றிருந்த அந்தத் தழும்பு என் திருஷ்டியில் முழுமையாக விழுந்தது.